k2

ஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின்velamalikithan தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்திருக்கிறார். சபையைப் பற்றி சில ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சிப்பதால் சபையைத் திறம்பட இயக்குவதற்குச் சிரமமாக உள்ளது எனவும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். கடந்த 10.-8.2018 திங்கட்கிழமை கரைச்சிப்பிரதேச சபையின் ஏழாவது அமர்வின்போது தவிசாளர் விடுத்த அறிவிப்பு இது.

சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுமளவுக்கு “ஊடகவியலாளர்கள்” யாரேனும் தவறான செய்திகளையும் கட்டுரைகளையும் அறிக்கையிட்டிருந்தால், அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்கள் செயற்பட்டிருந்தால் அவற்றைத் தகுந்த ஆதாரங்களோடு மறுத்துரைக்க வேண்டும். அல்லது அப்படி நடந்திருந்தால் அவற்றைக் குறித்து ஊடகங்களின் தலைப்பீடங்களுக்கு ஆதரங்களோடு தெரியப்படுத்தலாம். அல்லது சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம். அது நியாயமானது. அதுவே பொருத்தமான நடவடிக்கையாகும்.

அதனை விடுத்து சபையின் தவறான நிர்வாக நடைமுறைகளையும் அரசியல் உள்நோக்கமுடைய – பாரபட்சமான நடவடிக்கைகளையும்  விமர்சிக்கின்ற, கேள்வி எழுப்புகின்ற  ஊடகவியலாளர்களை நோக்கி இவ்வாறு தெரிவிப்பது மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் என்றே கொள்ளப்பட வேண்டும்.

அச்சுறுத்தல் விடுப்பது ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது மட்டுமல்ல அது மக்கள் விரோதச் செயற்பாடுமாகும். கூடவே தமது தவறுகளையும் குறைபாடுகளையும் மறைத்து, அதன் மூலம் வினைத்திறனில்லாத – தவறான நிர்வாகத்தை நடாத்துவதற்கு முற்படுவது சமூகத்துக்கு எதிரானது. மறுவளத்தில் தோல்வியடையும் செயற்பாடுகளுக்கான பொறுப்பினை ஊடகங்களின் தலையில் – ஊடகவியலாளர்களின் மீது – சுமத்தி விட்டுத் தப்பிவிடும் தந்திரோபாயமாகவும் உள்ளது இது.

இலங்கை அரசு உள்பட பல சக்திகள் பல சந்தர்ப்பங்களில் தம்மை விமர்சிப்பதற்கு எதிராக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தலாகச் செயற்பட்ட கசப்பான வரலாற்று அனுபவத்தைக் கொண்டவர்கள் நாம். அப்படியானவர்கள் எப்படி இன்று நமக்குள்ளேயே ஊடக சுதந்திரத்தையே நசுக்க முடியும்? ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவியலும்?

இது முரண் அல்லவா.

ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது உண்மைகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். மக்களுக்கு விரோதமான முறையில் அதிகாரத்தைப் பிரயோகிக்க முற்படுவதாகும். ஜனநாயகத்தின் முதுகெலும்பை உடைப்பதாகும். இதை விடுதலைக்காகப் போராடும் இனமொன்றின் பிரதிநிதிகள் செய்யவே முடியாது.

ஆனால், இந்த ஜனநாயக மறுப்புக்குச் சான்றாக “ஆட்சியில் – அதிகாரத்தில் நSurenாங்களே இருக்கிறோம். ஆகவே எதையும் நாங்கள் செய்வோம். நாங்கள் நினைத்ததையே செய்வோம். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று சபைகளிலும் சபைகளுக்கு வெளியிலும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்களும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் கூறி வருகிறார்கள்.

இப்படிச் சொல்வதோடு நிற்காமல் அப்படியே – தாங்கள் நினைத்தமாதிரியே – வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஏனைய எதிர்த்தரப்பு உறுப்பினர்களை மதிப்பதும் இல்லை. அவர்களுடைய குரல்களுக்கு – நியாயமான கோரிக்கைகளுக்கு இடமளிப்பதும் இல்லை. அப்படி அவர்கள் தங்கள் நியாயத்தைக் கூற முற்படும்பொழுது கும்பலாக நின்று அதைக் குழப்புவதற்கு ஆளுந்தரப்பினர் முற்படுகின்றனர்.

இவ்வாறு எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதன் மூலம் மற்றவர்களுடைய குரல்கள் மறுக்கப்படுகின்றன. கண்ணியமற்று நிராகரிக்கப்படுகின்றன. அடாத்தாகத் தடுக்கப்படுகின்றன. அதையும் கடந்து அவர்கள் பேசும் விடயங்கள், முன்வைக்கப்படும் கோரிக்கைகள் முறைப்படி அறிக்கையிடப்படுவதில்லை. (இதற்குப் பொறுப்பு சபைகளில் உள்ள அறிக்கையிடும் உத்தியோகத்தர். அவர் சரியான முறையில் அறிக்கையிடப்படாது என மிரட்டப்படுகிறார். இல்லையென்றால் சபையில் பேசப்படும் விடயங்கள் எப்படி பதிவு செய்யப்படாமல் தவறும்? இனவாத அரசாங்கம் என்று சொல்லப்படும் இலங்கைப் பாராளுமன்றத்திலேயே எவர் ஒருவருடைய உரைகளும் கோரிக்கைகளும் தவற விடப்படுவதில்லை. ஹன்சார்ட் பதிவுகளைப் பற்றிய புகார்களில்லை. ஆனால், இந்தப் பிரதேச சபைகளின் அறிக்கைகளில் விருப்பத்துக்கேற்ற விதமாகவே அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன). இதையிட்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் முறைப்பாட்டைப் பல தடவை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கும் எந்த மதிப்புமில்லை. பதிலுமில்லை?!

இது எத்தகைய மோசமானதொரு நிலை!

சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து ஜனநாயகத்தைக் கோருகின்ற தரப்புகள் தாம் அந்த ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கத் தயாரில்லை. சிங்களத் தரப்பிடம் ஜனநாயகமில்லை என்று kili– சொல்லுவோர் அதே வேலையை எதிர்த்தரப்பிலுள்ளவர்களுக்குச் செய்கின்றனர். இதை என்ன என்று சொல்வது?

இலங்கைத் தீவிலும் தமிழ்ச்சமூகத்திலும் நீண்ட காலத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் ஜனநாயக அடிப்படைகள் மெல்ல மெல்ல துளிர்க்கின்றன. தமிழ்ச்சமூகம் மெல்ல மெல்ல இதைப் பயின்று வருகின்றது. அப்படிப் பயின்று, முன்னேற்ற வேண்டிய ஜனநாயக அடிப்படைகளை மறுதலிக்கும் விதமாக – எதிர்நிலையில் – மறுத்தானாகச் சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் ஆபத்தானது.

தமிழ் அரசியல் கட்சிகள் தொடக்கம் தமிழ்ச்சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் இந்த ஜனநாயகப் பற்றாக்குறை உண்டு. இதில் அரசியல் தரப்புகளிடத்தில்தான் இந்தப் பிரச்சினை மிகக் கூடுதலாக உள்ளது. அதிலும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் இது உச்சம். இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் இந்த விசயங்களை  ஊடகவியலாளர்கள் கேள்விக்குட்படுத்துகின்றனர். விமர்சிக்கின்றனர். இதற்கான சான்றாதாரங்களையும்  ஊடகத்துறையினர் ஆவணப்படுத்தி வெளிப்படுத்தி வருகிறார்கள். இது ஊடகத்துறையினரின் கடமையும் பொறுப்புமாகும். இதைச் செய்யவில்லை என்றால் ஊடகத்துறையினரும் அதிகாரத்துக்கு – தவறுகளுக்குச் சேவகம் செய்வதாக அமைந்து விடும். மக்களுக்கு எதிரானவர்களாகி விடுவர்.

கரைச்சிப் பிரதேச சபை என்பது மேற்கே வன்னேரிக்குளத்திலிருந்து கிழக்கே மயில்வாகனபுரம் வரையிலான பெரும் பரப்பையுடையது. கரைச்சி, கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கியது. கிளிநொச்சி நகரையும் பரந்தன் சிறு நகரையும் அக்கராயன், வட்டக்கச்சி, தருமபுரம், இரணைமடு, உருத்திரபுரம் ஆகிய பெரும் பிரதேசங்களையும் கொண்டது. இதற்குட்பட்ட அத்தனை ஊர்களும் யுத்தப் பாதிப்பைச் சந்தித்தவை. நீண்டகாலமாக அபிவிருத்தியையே காணாதவை. மேலும் இந்தப் பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த ஆண்டுப் புள்ளி விவரத்தின்படி 32 ஆயிரத்து 141 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 3091 மக்கள் உள்ளனர். இதில் நான்கில் ஒரு பகுதியினர் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தவர்கள். இத்தகைய ஒரு பிரதேச சபையை நிர்வகிக்கக் கூடியவர் எத்தகைய தகுதியையும் மாண்பையும் அறிவையும் ஆற்றலையும் செயற்திறனையும் கொண்டிருக்க வேண்டும்? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் – அதன் வரையறைகளுக்குள் நிற்காமல், பரந்த தளத்தில் அனைவரையும் அரவணைத்துச் செயற்படுத்தக் கூடிய மன விரிவும் சிந்தனைத்திறனும் இதற்கு அவசியம். பிரதேசத்தின் துறைசார் நிபுணர்களையும் ஆற்றலாளர்களையும் மக்கள் மீதான நேசிப்பாளர்களையும் சமத்துவ நோக்குடையோரையும் மதித்து உள்ளீர்க்க வேண்டும். புதியதாகச் சிந்திப்போரை இனங்கண்டு சேர்க்க வேண்டும். விவாதிப்போரையும் எதிர்த்தரப்பினரையும் வரவேற்று உரையாடுவது அவசியம். யுத்தத்திற்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்டு வரும் மீள் நிலைப்படுத்தல், மற்றும் புதிய அபிவிருத்தித்திட்டங்களை நீண்ட காலத்துக்குரிய – தூர நோக்கில் பார்க்கக் கூடியவர்களை நெருங்க வேணும். இப்படிப் பல விசயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் செயkili4்வதே தவிசாளருக்கு அவசியமானது.
ஆனால், இப்போது இதில் ஒன்று கூட நடைமுறையில் இல்லை. இன்றைய பிரதேச சபையானது முற்றிலும் கட்சி அரசியல் பிடிக்குள் – அந்த மனப்பிராந்திக்குள் சிக்குண்டுள்ளது. இதனால்தான் ஜனநாயக மறுப்புகளும் அதற்குச் சமனான எதேச்சாதிகார நடவடிக்கைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சனங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, சனங்களின் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக அவரவர் அரசியலைப் பற்றிச் சிந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

சபையில் பல கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்வோர் உள்ளனர். பல சிந்தனைப்போக்குடையவர்கள் உள்ளனர். சமூகத்தின் பிரதிநிதிகள் அப்படித்தான் இருப்பார்கள். சமூகமானது எப்போதும் ஒற்றைப்படையாக இருப்பதில்லை. ஒற்றைப்படையாகச் சிந்திப்பதுமில்லை. அது பன்முகமுடையது. பல் சிந்தனையுடையது. ஆகவே சபையிலும் இந்தப் பன்மைத்துவம் பேணிப்பாதுகாக்கப்பட வேணும். ஆனால், அது மருந்துக்கும் ஆளும் தரப்பினரிடம் கிடையாது. இதற்குச் சில உதாரணங்கள்.

1.   கரைச்சிப் பிரதேச சபையின் பொதுநூலக அபிவிருத்திக்கான ஆலோசனைக் கூட்டமொன்றினை தவிசாளர் கூட்டியிருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்திற்கு சபைச் செயலாளர் அழைக்கப்படவில்லை. மட்டுமல்ல, “நூலக அபிவிருத்திக்குப் பொருத்தமான – அந்தத்  துறையில் அனுபவமுடையவர்கள் குறித்த பிரதேசத்திலேயே இருக்கிறார்கள். அவர்களையும் இந்த ஆலோசனைச் சபையில் உள்வாங்க வேண்டும்” என அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதை தவிசாளரும் இந்த ஆலோசனைக்கு அழைக்கப்பட்டிருந்த சபை உறுப்பினர் ஒருவரும் மறுத்துள்ளனர். “நாங்கள் தெரிவு செய்கின்றவர்களைத் தவிர வேறு ஆட்களுக்கு இங்கே இடமில்லை” என்று பதிலளித்தனர். “இது ஒன்றும் உங்கள் வீட்டு விசயமில்லை. பொது நூலக விவகாரம். இதில் துறைசார்ந்தவர்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம்” என்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்திக் கூறினர். இருந்தும் அதற்கு தவிசாளர் சம்மதிக்கவில்லை. இதனால் நூலக அபிவிருத்தி விடயம் அப்படியே கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் இந்த ஆலோசனைக்குழு பற்றி சபையில் தெரிவிக்கப்படவும் இல்லை. அதற்கான அனுமதியைப் பெறவும் இல்லை. இதை நடத்துவதற்கான அழைப்பிதழ் கூட அச்சிட்டு வழங்கப்படவில்லை. ஆகவே நிர்வாக நடைமுறைக்கு மாறாகவே இது நடந்துள்ளது.

2.   பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் முள்ளிப்பற்று உப அலுவலகத்தில் ஆயுர்வேத மருந்தகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மாதம் நடந்தது. இதில் இந்த உkli-marketப அலுவலகத்துக்கான காணியை அன்பளிப்புச் செய்தவரை – அவருக்கான மதிப்பளித்தலின் அடிப்படையிலும் பிறருக்கான தூண்டலாக இருக்கும் எனவும் அடிக்கல் நாட்டுவதற்கு அழைப்பது என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை மறுதலிக்கும் விதமாக சபையின் தவிசாளர் திடீரென அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இதை அவர் தனியாகவே எடுத்திருந்தார். இதற்குக் காரணம், தனக்கு விருப்பமான முறையில் இந்த நிகழ்வை நடத்துவதற்கே. அதன்படி, அழைப்பிதழோ நிகழ்ச்சி நிரலோ உருவாக்கப்படாமல், திடீரென நிகழ்வை ஏற்பாடு செய்த தவிசாளர் சபைத்தீர்மானத்துக்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் காணி வழங்கியவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். இவ்வளவுக்கும் இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர், மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். இருந்தும் நிகழ்ச்சி நிரல் இல்லாத மறைமுகமான அஜென்டாவில் நிகழ்வை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்வை ஏனைய உறுப்பினர்கள் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி) புறக்கணித்திருந்தனர். இவர்களே பெரும்பான்மயினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3.   கரைச்சிப் பொது நூலகத்துக்கான நூல்கள், பத்திரிகைகளில் தாம் விரும்பியவர்களின் புத்தகங்களும் பத்திரிகைகளுமே இடம்பெற வேண்டும். ஏனையவற்றுக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சாராரின் – ஒரு குறிப்பிட்ட வகைப்புத்தகங்களே வாங்கப்படுகின்றன. பத்திரிகைகளும் அப்படித்தான். இது அறிவை நிராகரிக்கும் செயற்படாகும். ஜனநாயக மறுப்பு இங்கும் தலைவிரித்துள்ளது.

4.   வட்டாரங்களில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறும்போது குறித்த பிதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அல்லது குறித்த வேலையைக் கோரிய உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது சபையின் தீர்மானம். ஆனால், சில இடங்களில் இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பதிலாக அந்த இடங்களில் தமது கட்சியின் உறுப்பினர்களை வைத்தே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேட்டால் அதற்கு ஏற்கவே முடியாத சாட்டுப்போக்குகள் கூறப்படுகின்றன. இதையும் கடந்து வலியுறுத்திக் கேட்டால் “நாங்கள் அப்பிடித்தான் செயற்படுவோம். விரும்பினால் இருங்கள். இல்லையென்றால் விடுங்கள்” என்று சொல்லப்படுகிறது.

5.   கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிய நவீன சந்தைக்கான கட்டித்தை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தச் சந்தையை அமைக்கும்போது குறித்த வர்த்தகர்களோடு ஆலோசனை செய்யப்பட்டு, அவர்களுடைய தேவைகளை அறிந்து அதைச் செயற்படுத்துவதே நியாயமானது. அதைச் செய்வதற்கு பிரதேசசபை மறுக்கிறது. பதிலாக தாம் நினைப்பதையே நீங்கள் ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் தவிசாளருக்கும் வர்த்தகர்களுக்குமிடையி்ல் பெரிய வாக்குவாதமே நடந்துள்ளது. வர்த்தகர்கள் தமது நிலைப்பாட்டை வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “இரணைமடுத்தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லலாமா இல்லையா என்பதற்கு விவசாயிகளின் அபிப்பிராயமும் அனுமதியும் தேவை. எங்களுக்கான சந்தையைக் கட்டுவதற்குத்தான் அனுமதி தேவையில்லையா?” என்று கேட்கிறார்கள் வர்த்தகர்கள். பதில் சொல்லத்தான் ஆளில்லை.

6.   சபையின் மூலம் பொழுது போக்கு மையம் என்ற அடிப்படையில் கிளிநொச்சிக் குளத்துக்கு வடக்கில்  – நகர மத்தியில் – ஒரு நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதை எந்த வகையிலும் யாரும் பயன்படுத்தவே முடியாது. இந்தக் கட்டிடம் கட்டித் திறக்கப்பட்டதற்கு இதுவரையில் அதை யாரும் பயன்படுத்தவும் இல்லை. இதைக்குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்டாலும் அதற்குப் பதில் கிடையாது. இதைப்போன்றதொரு சுற்றுலா மையம் வன்னேரிக்குளத்திலும் பெருமளவு நிதியைச் செலவு செய்து கட்டி வீணே விடப்பட்டுள்ளது.

7.   நகரத்தில் தற்போது இயங்கும் நூலக வளாகம் ஏறக்குறைய சுடுகாட்டை ஒத்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது பராமரிக்கப்படாமலே உள்ளது. நிழல் மரங்கள் கூட நாட்டப்படவில்லை.

8.   பிரதேச சபை உள்ளிட்ட நகரத்தின் சுற்றுச் சூழல் மிக மோசமான முறையில் குப்பை கூழமாகவும் சீரான வடிகால் இல்லாமலும் உள்ளது. (இதற்குள் நகரசபைக் கனவு வேறு).

9.   கிளிநொச்சிப் பொதுச் சந்தை மிக மோசமான சுகாதாரச் சீர் குலைவுக்குள்ளாகியிருக்கிறது. நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புழங்கும் சந்தை இது.

10. உருத்திரபுரம், வட்டக்கச்சி, இரணைமடு, அக்கராயன், தருமபுரம், பரந்தன் ஆகிய பிரதேசங்களில் உள்ள சந்தைகள், பொது நூலகங்கள் சீராக்கம் செய்யப்படாமல் அப்படியே உள்ளன. இவற்றை பிரதேச வளப்படுத்தல் மையங்களாக மாற்றியமைப்பதைப் பற்றி அக்கறைப்படவில்லை.

11. நகரத்தில் சிறார் பூங்கா, முதியோர் ஓய்வகம் ஆகியவை அவசியமாக அமைக்கப்பட்டிருக்க வேணும். அது பற்றிய அக்கறை கொள்ளப்படவில்லை.

12. இதற்கிடையில் வீதிபுனரமைப்பு என்ற பேரில் கனரக இயந்திரம் மூலமாக வீதிகள் ஓரப்புழுதியினால் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு மண் நிரப்பப்பட்ட வீதிகள் எதிர் வரும் மழைக்காலத்தில் மோசமான அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளாகிப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கப்போகின்றன. இது பற்றிய தொழில் நுட்ப ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. (வீதிப்புனரைப்பு, பிரதேச ரீதியாகச் சமூகப் பணியாற்றிய மூத்தோர்களுக்கான நினைவுச் சிலை அமைப்பு, வரலாற்று அடையாளப் பேணுகை ஆகிய மூன்று வேலைகளைக் கரைச்சிப் பிரதேச சபை செய்துள்ளது. இவை மூன்றும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தன்னுடைய கடந்த உள்ளுராட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த வேலைகளாகும்)

இப்படிப் பல விடயங்களில் சபை மிகத் தவறான முறையிலேயே செயற்பட்டு வருகிறது. சபையின் நடவடிக்கைகளும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் வீழ்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. மக்களை மனதில் கொள்ளாமல் கட்சியை மனதில் கொண்டிருப்பதன் விளைவே இதுவாகும். இதனால்தான் ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயக விரோதமாக – மக்கள் நலனுக்கு மாறாக நடந்து கொண்டிருக்கின்றன.

மிக மோசமான அதிகாரத்தினாலும் ஒடுக்குமுறையினாலும் ஜனநாயக மறுப்பினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று தானும் அப்படி இருக்க முடியாது. அப்படிச் செயற்படுவது நல்லதுமல்ல. ஆனால், அப்படித்தான் நடைமுறை உள்ளது. இதனால், நிர்வாக அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கூட திகைப்படைந்து என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். அந்தளவுக்கு அரசியல் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது.

“பிரதேச சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைப் போல இப்படிக் குதிக்கிறார்கள். நல்ல வேளை இவர்களுக்குத் தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் மக்கள் எல்லாம் வெளியேறி வேறிடம் தேடியிருக்க வேண்டும்” என்கிறார் கவலையோடு ஒரு மூத்த விவசாயி.

கிளிநொச்சியில் மக்கள் நலன்சார் பணிகள் ஏராளமாக  இருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு பல தேவைகள் உண்டு. அவற்றை அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படுவதன் மூலமே சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய முடியும். அதிலும் எதிர்த்தரப்பினருக்கு அளிக்கப்படும் கௌரவம், அவர்களுடைய குரலுக்கான இடம் போன்றவற்றை நிறைவாகச் செய்வதன் மூலம் ஜனநாயக விழுமியத்தைக் குறித்து சிங்கள ஆதிக்கத்தரப்பினருக்கு விழிப்பை ஏற்படுத்தலாம். ஜனநாயக விழுமியங்களில் தமிழ்த்தரப்புக் கொண்டுள்ள பற்றையும் சிறப்பையும் வெளியுலகமும் மக்களும் உணரச் செய்ய முடியும்.

இது ஜனநாயக யுகம். ஜனநாயகத்தை யாரெல்லாம் நடைமுறைப் படுத்துவதற்குப் பின்னிற்கிறார்களோ அவர்கள் எத்தகைய வலிமையான தரப்பினராக இருந்தாலும்  நிராகரிக்கப்படுவர். இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு.

ஜனநாயகத்தில் அனைவருக்குமான இடம் என்பது முக்கியமானது. இங்கே இந்தச் சபைகளை நடத்துவோருக்கு இந்தப் புரிதல் இல்லை. இதனால் சபைகளைத் தமது கட்சி அலுவலகம் மாதிரியும் சபையின் நிர்வாக அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் கட்சி உறுப்பினர்களைப் போலவும் நடத்த முற்படுகின்றனர்
வட மாகாணசபை எப்படிச் சீரழிவைச் சந்தித்திருக்கிறதோ அதற்கு நிகரான நிலையை இந்தச் சபைகளும் எட்டியுள்ளன. வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில்தான் அதிகமான சபைகள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் கிளிநொச்சியல் உள்ள அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அங்கே  குறைந்த பட்சம் பிற குரல்களுக்கான இடமாவது உண்டு. கிளிநொச்சியில் கண்ணியம் வீழ்ச்சியடைந்த நிலையே காணப்படுகிறது. தேர்தல் பிரச்சார மேடைகளை ஒத்ததாகவே பிரதேச சபையின் ஒன்று கூடல் களமும் உள்ளதது.
எனவே இதைக் கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இதைக் குறித்து மக்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை எனில், பெரும் பாதிப்பையே சந்திக்க வேண்டியிருக்கும்.

இது நல்ல சகுனமல்ல. அதிகாரம் மக்கள் விரோதமாக மாறினால், அதன் விளைவு மக்களின் நலனையே அது பாதிக்கும். ஆகவே இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்தப் போக்கை எதிர்க்க வேணும். மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்கான பணியைச் செய்ய வேண்டிய கடப்பாட்டை – நெருக்கடியை உருவாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*