Dinesh-Gunawardena

பொது எதிரணியின் பாரிய பேரணியை எவ்வாறு எதிர்கொள்வது –அரசாங்கம் தீவிர கவனம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு பொது எதிரணியினர் புதன்கிழமை கொழும்பை மையமாக கொண்டு நடத்த தீர்மானித்துள்ள பாரிய பேரணி குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

பொது எதிரணி பெருமளவு மக்களை பேரணிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை அரசாங்கம் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.

இந்த மோதலில் யாருக்கு வெற்றி என்பது அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தெரிந்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பேரணிக்கு  மக்கள் அழைத்துவரப்படுவதை தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக 8 ம் திகதி வரை தனியார் பேருந்து உரிமையாளர்கள் விசேட பேருந்து சேவைகளை நடத்துவதற்கு மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபை தடை விதித்துள்ளது.

மேல்மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் இந்த உத்தரவை மீறுபவர்களின் வழித்தட அனுமதிகள் இரத்துச்செய்யப்படலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை அரசாங்கத்திடமிருந்து மேலும் இதுபோன்ற பல அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் பேருந்து உரிமையாளர்களிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்களை கொழும்பிற்கு கொண்டுவருவதற்கு உதவவேண்டாம் என அவர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிலர் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டுள்ளனர் எங்களிற்கு மக்கள் ஆதரவு இல்லையென்றால் அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெறவுள்ள பேரணியின் முக்கிய கோரிக்கையாக தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறவேண்டும் என்பதே காணப்படும்,அரசாங்கம் மாகாணசபை தேர்தலிற்காக தயாராவதை நாங்கள் இன்னமும் காணவில்லைஎனவும் தினேஸ் குணவர்த்தன் குறிப்பிட்டுள்ளார்

வாழ்க்கை செலவு அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்துவோம் பாண் விலை அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*