mahavali

முல்லைத்தீவு மக்கள் எதிர்கொள்ளவுள்ள பாரிய ஆபத்து?!!

முல்லைத்தீவில் கரைத்துறைபற்று பிரதேசசெயலகத்தின் கடமைகளிற்கு சவால் விடுத்து, சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை ஆரம்பித்துள்ள மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கையால் மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் மக்களின் காணி உரிமங்களின் சட்டபூர்வ தன்மை கேள்விக்கிடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களே, இப்பொழுது ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருநாட்டுக்கேணி கிராமம் முழுமையாக தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமமாகும்.

1984ஆம் ஆண்டில் இந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், அரச படைகளால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் மீண்டும் 2010ஆம் ஆண்டில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் காலப்பகுதிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த சிங்கள மீனவர்கள், தமிழ் மீனவர்களின் பாரம்பரிய கரைவலைப்பாடுகளை அத்துமீறி கைப்பற்றி மீன்பிடியில் ஈடுபட்டனர். இவர்கள் கடற்கரையோரக் காணிகளை அத்துமீறிப் பிடித்து நிரந்தரமான சொகுசு வீடுகளையும் அமைத்து வந்தனர். இவ்வாறு கருநாட்டுகேணியில் கடற்கரையோரத்தை அத்துமீறி கைப்பற்றிய மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோருக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழங்குத்தாக்கல் செய்ததன் அடிப்படையில் அவர்களை இவ் அரச காணிகளிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றால் கட்டளை இடப்பட்டது. கடற்கரையோரத்தில் வீடுகள் அமைக்க முடியாதென்பது இலங்கை சட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கள மீனவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். எனினும் அவர்களின் கோரிக்கை நியாமற்றதும் சட்டரீதியானது அல்ல எனவும் குறிப்பிட்டு உயர் நீதிமன்றால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் கட்டளையை ஆட்சேபித்து அதனை மறு ஆய்வுக்குட்படுத்தக் கோரி, மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர் .

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோருக்கு காணியிலிருந்து வெளியேறும் உத்தரவு வலுவிலுள்ள நிலையில் மேற்படி காணிகளுக்கு மகாவலி அதிகார சபையினால் காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்து, சட்டரீதியாகவே அங்கு குடியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மகாவலி அதிகாரசபைக்குட்பட்ட நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற பிரதேச செயலாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும் மகாவலி அதிகாரசபை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

விவசாயத்துடன் தொடர்புடைய மகாவலி அதிகாரசபை, கடற்றொழில் விடயத்தில் எப்படி மூக்கை நுழைக்கலாம்? ஏற்கனவே உள்ள சட்டங்கள், நியமங்களிற்கு உட்படாமல் எப்படி மகாவலி அதிகாரசபை செயற்படலாம்? போன்ற கேள்விகளிற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

இந்தநிலையில், வடக்கு மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் முல்லைத்தீவில் சுமார் 20,000 காணி உறுதிகள் வழங்கியுள்ளது. சட்டத்தை மீறி அமைக்கப்பட்டுள்ள கருநாட்டுகேணி கடற்கரை வீடுகளை காப்பாற்றும் முயற்சியில் மகாவலி அதிகாரசபை இறங்கியுள்ளது. தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் பிரதேச செயலகத்தால் தலையிட முடியாதென்றும் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், மகாவலி எல் வலயத்திற்குள் அடக்கப்பட்டள்ள நாயாறு, கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் பகுதிகளில் உள்ள மக்களின் நில உரிமை இல்லாமல் போய், மகாவலி அதிகாரசபையின் பிடியில் முழுமையாக அவை சென்றுவிடும்.

ஏற்கனவே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் முகத்துவாரம், கருநாட்டுகேணி பகுதியிலுள்ள காணிகளை மகாவலி அதிகாரசபை அளவீடு செய்ய ஆரம்பித்துள்ளது. அங்குள்ள வயல்காணிகள் பல சிங்களவர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கையால் முல்லைத்தீவின் நாயாற்றிற்கு அப்பாலான பகுதி சிங்கள குடியேற்றமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவில் மாகாண காணி ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட 20,000 காணி உறுதிகளும் சட்டவலுவை இழக்கும் அபாயமும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*