MANNAR-SATHOSA-ISUE-12

மன்னாரில் மீட்கப்படும் சடலங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்!

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) 42ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், அங்கு அகழ்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை கண்டெடுக்கப்பட்ட எந்தவொரு எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான எவ்வித தளும்புகளும் இல்லை என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஐந்து சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்தமட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக்காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரனின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் 42ஆவது நாளாக தொடர்ந்து வருகின்ற நிலையில், இன்றைய அகழ்வு பணிகளின் ஹோமாகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*