un

ஜெனீவா கூட்டத் தொடரின் போது தமிழ் – சிங்கள தரப்புக்கள் கருத்துமோதல்!

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் பூதாகரமானதையடுத்து, கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருந்த தமிழ் பிரதிநிதிகளுக்கும் – இலங்கை அரசாங்க சார்பு பிரதிநிதிகளுக்குமிடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த அரசாங்க சார்பு பிரதிநிதிகள், கூட்டத்தொடரிலிருந்து பாதியில் எழுந்து சென்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் பக்க அமர்வாக இலங்கை விவகாரம் திங்கட்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பிய தமிழ் பிரதிநிதிகள், “நாங்கள் யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வினவவில்லை. யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே என்றே வினவுகின்றோம்” எனத் தெரிவித்தனர்.

ஆனால், அங்கு பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட இலங்கை அரசாங்க சார்பு பிரதிநிதிகள், “நாம் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அவசியமில்லை. எமது வீரர்களும் கொல்லப்பட்டார்கள். எமது பிள்ளைகளும் கொல்லப்பட்டார்கள். நாம் அதுபற்றி கூறுவோம்” என அவர்களுக்குள் பேசிக்கொள்வது காணொளியில் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ் பிரதிநிதிகள் தரப்பில் காணொளியொன்றை ஒளிபரப்பி அதற்கு பதிலளிக்குமாறு அரசாங்க சார்பு பிரதிநிதிகளை கோரியிருந்த போது, “இவர்கள், சித்தரிக்கப்பட்ட போலி காணொளிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்து நேரத்தை வீணடிக்க தேவையில்லை. நாம் இங்கிருந்து கலைந்து செல்வோம்” எனத் தெரிவித்து வெளியேறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தும் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்ற நிலையில், அரசாங்க பிரதிநிதிகள் பாதுகாப்பு தரப்பினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*