police

வல்வெட்டித்துறை இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரும் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, உள்ளூரில் சிகிச்சை பெறாது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் தெரிவிக்கையில், ”கடந்த சனிக்கிழமை ஊரில் நண்பர்களுக்கு இடையில் கைக்கலப்பு ஏற்பட்டது. அதன்போது எனது நண்பர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலுக்கு இலக்கான நண்பரை நான் அழைத்து வந்தபோது, மற்றைய தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் எம்மை உதயசூரியன் கடற்கரை மதவடி பகுதியில் வழிமறித்து தாக்குதல் நடத்தினார்கள்.

பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு தடுத்து வைத்து எம்மை சிவில் உடையில் இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் கடுமையாக சித்திரவதை புரிந்து எம்மை தாக்கினார்கள்.

பின்னர் எம்மை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அன்றைய தினமே நீதவான் எமக்கு பிணை வழங்கினார்.

எமது ஊரில் உள்ள ஊறணி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றால், பொலிஸாரின் அச்சுறுத்தல் இருக்கும் என்பதனால் நாம் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றோம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*