un

மனித உரிமைப்பேரவையின் 38 ஆவது கூட்டத் தொடர்; இலங்கையின் விசேட குழு பங்கேற்காதாம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. ஜெனியாவில் நடைபெறும் இக்கூட்டத்தொடரை ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன்ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கேள்விகளை எழுப்புமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுக்கள் ஆகியன இலங்கை தொடர்பில் கேள்வி எழுப்புமென கூறப்படுகின்றது.

இந்த 38ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை சார்பில் விஷேட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளாத நிலையில் ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் பங்கேற்பார்களென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பாக எந்ததொரு உத்தியோகபூர்வ விவாதங்களும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கை தொடர்பாக பல்வேறு உபகுழு கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உபகுழு கூட்டங்களை நடத்தி இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர். மேலும் இலங்கை தொடர்பில் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் கருத்து தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கைளை செயத் ரா-அத் அல் ஹுசைன் முன்வைத்தார். அதன்படி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் குறித்த இரண்டு வருட கால அவகாசம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*