vit

சாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்? – வித்தகன்

கட்டுரைக்குள் நுழையும் முன்…!

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வணிக நோக்கில் வந்த அராபியர்கள் இங்கு குடியேறி – திருமண உறவு மூலம் தமிழர்களுடன் கலந்தனர். ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமியர்கள் என்றே தம்மை அழைத்தனர். போர்த்துக்கேயர் அவர்களை “மூர்ஸ்” (moors) என அழைத்ததைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் தனி இனமாக தம்மை வரித்துக் கொண்டனர்.

தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதிகள் – பேரினவாத அரசால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது ஆரம்பத்தில் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டனர். எனினும் பின்னர் விலகிக் கொண்டனர். அதன் பின் நடந்த சில கசப்பான சம்பவங்களை சாட்டாக வைத்து தமிழரின் உரிமைப் போரை மறைமுகமாக காட்டிக் கொடுத்தவர்கள் நேரடியாகவே காட்டிக் கொடுத்து அரசியல் செய்தார்கள். சிங்கள – பௌத்த தேசியம் இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பிய நிலையில் அவர்கள் தமிழருக்கு எதிராக தீவிரமான செயற்பட்டு வருகின்றனர்.

தமிழர் நலனுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் சிங்கள – பௌத்தத்தின் நற்சான்றிதழைப் பெற்றுவிடலாம் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளின் எண்ணம். அதேவேளை தமிழருடன் இணைந்து செயற்பட மறுப்பதன் மூலம் அவர்கள் தந்திர அரசியல் நகர்வையும் முன்னெடுத்து வருகிறார்கள் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

——————–

இதுவரை காலமும் இல்லாதளவு தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனை – அதீத உணர்வு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. “ஸ்டெர்லைட்” போராட்டம்கூட தமிழ்த் தேசிய சிந்தனை மக்களிடத்தில் ஆழப் பதிந்த பின்னர் ஏற்பட்டதுதான். திராவிட தேசிய வாதம் பேசிய தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய வாதம் முன்னெடுக்கப்பட காரணம் தமிழர்கள் – தமிழகம் மீதான மத்திய, அயல் மாநில அரசுகளின் ஒதுக்கல்கள்தான்.

தமிழகத்தில் தமிழ்த் தேசிய சிந்தனையை விதைத்தவர் சி.பா.ஆதித்தனார். அவர் இட்ட விதையை விருட்சமாக்கி அவர்களுக்கே மீளக் கொடுத்தவர்கள் ஈழத் தமிழர்களும் தலைவர் வே.பிரபாகரனும்தான். இந்நிலையில் தமிழகத்தில் எழுந்துள்ள தமிழ்த் தேசிய சிந்தனை மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுவிடாது தடுத்துவிட சிங்கள – பௌத்த அரசு மட்டுமல்ல – இந்திய அரசும் திட்டமிட்டு செயற்படுகின்றன. காரணம் தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை – ஈழத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டால் அது தனது நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதுடன் எதிர்காலத்துக்கு ஆபத்தாகி விடும் என்றும் அஞ்சுகிறது.

திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியைகளின் பர்தா விவகாரம் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து தமிழர்கள் – இந்துக்களுக்கு எதிராகப் போராட்டங்களை முஸ்லிம்கள் முன்னெடுத்தனர். இந்தத் தீயில் குளிர்காய்ந்த சிலர் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். முஸ்லிம் பகுதியில் அமைக்ககப்படும் நட்சத்திர விடுதி ஒன்றுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் பகுதிக்குள் தமிழர் ஒருவர் நட்சத்திர விடுதியை அமைக்கிறார் என்ற காழ்ப்புணர்வே இந்தப் போராட்டத்துக்குக் காரணம். ஏனெனில் முஸ்லிம்களின் உலமா சபை (கிளை) அந்த விடுதியை கட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

சிலரின் திட்டமிட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து அந்த விடுதியைக் கட்டுவதற்கு யாழ். மாநகர சபை தடை விதித்தது. எனினும் முறைப்படி அனுமதி பெறப்பட்ட விடுதி கட்டும் பணி இடம்பெறுவதால் தடையை அது நீக்கிக் கொண்டது. ஆனால் பாரபட்சம் பார்த்து மாநகர சபை நடக்கிறது என இப்போது குரல்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில்தான் கடந்த வாரம் சாவகச்சேரி நகர சபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஈழம் சிவசேனை அமைப்பினர் முன்னெடுத்தனர்.

சாவகச்சேரி நகர சபையின் அனுமதியுடன் இயங்கும் கொல்களத்தில் பசு மாடுகள் கொல்லப்படுவதற்கும் – அதிகளவான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மாடுகளை கொள்வனவு செய்து இந்தக் கொல்களத்தில் இறைச்சியாக்கி அவற்றை முஸ்லிம்களின் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு வேண்டியவர்களுக்கே இந்த இறைச்சிகள் சென்று சேர்கின்றன. இதற்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன். இவருக்கும் இந்திய உளவு அமைப்பு அமைப்பான “றோ” மற்றும் தீவிர இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக பரவலாக கருதப்படுகிறார். நெடுங்காலம் இந்தியாவில் வசித்து வந்த இவர் இலங்கை வந்த பின்னர், இந்தியாவுக்கு நெருக்கமாக – இந்தியாவின் தேவைகளை நிறைவு செய்பவராக செயற்படுகின்றமை பட்டவர்த்தனமாகியிருக்கின்றது.

ஈழம் சிவசேனை அமைப்பை தொடக்கியவேளை (2016) ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை அழைப்பித்து இலங்கையில் பேரணி ஒன்றை நடத்த முயன்று அதற்காக இந்து இளைஞர்களை ஒன்றிணைத்தார். எனினும் ஓரிரு கலந்தாலோசனைக் கூட்டங்களின் பின்னர், மெல்ல அந்தப் பேரணி பற்றிய விடயம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது தீவிர இந்து அமைப்பாக மாற்றுவதற்கு சிவசேனை முயன்று வருகின்றது.

இவை ஒருபுறமிருக்க கிறிஸ்தவ அமைப்புகள் இந்து மதத்தவர்களை மெல்ல மெல்லத் தம் பக்கம் திசை திருப்பி வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் இன்று இந்து சமயத்தவர்களின் எண்ணிக்கை படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலும் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வெகுவேகமாக குறைந்து வருகின்றனர். இது ஒருபுறத்தில் இந்து மதத்தவர்களை கிளர்ந்தெழ வைக்கிறது. மோசமான விளைவுகள் ஏற்படாத போதிலும் இதைச் சாட்டாக வைத்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்டுகின்றன.

எனினும் இதேபோன்றதொரு நிலையை கிறிஸ்தவமும் – றோமன் கத்தோலிக்கப் பிரிவினர் எதிர்கொள்கின்றனர். பொதுவாக றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவப் பிரிவினர் (யெகோவாவின் சாட்சியம்) முன்னர் இந்துக்களை இலக்கு வைத்தே தமது மதத்தைப் பரப்பி வந்தனர். அவர்கள் இப்போது றோமன் கத்தோலிக்கப் பிரிவினரையும் இலக்கு வைத்து செயற்படுவதால் அவர்களுக்கு எதிரான மனநிலை றோமன் கத்தோலிக்கப் பிரிவினரிடம் ஏற்பட்டு வருகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் மறைந்துபோன அல்லது திருமணத்தின் போது மட்டுமே சமூகத்தவர்களால் பார்க்கப்பட்ட சாதிக் கட்டமைப்பை – மீண்டும் சமூக மயப்படுத்தும் நிலை உருவாக்கப்படுகின்றது. இதற்குப் பிரதான களம் சமூகவலைத்தளங்களே அமைக்கின்றன. சாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகள் முன்னர் போன்று யாழ்ப்பாணத்தில் ஏற்படும் நிலை உருவாகிறது.

இவை எல்லாமே திட்டமிடப்பட்ட – அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளே. ஈழத்தில் தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனையை சிதைவடையச் செய்து மத ரீதியான சிந்தனை – பிரிவினைகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் தமிழீழப் பற்றுதலை அழித்து விடலாம் என்பதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள தமிழ்த் தேசிய அலை இனி வரும் நாட்களில் மிகத் தீவிரம் அடைந்து விடும் – அதே தமிழ்த் தேசிய சிந்தனையுடன் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அது வாய்ப்பாகி விடும். இதேபோன்று ஈழத்தமிழர்களின் ஆயுத – போராட்ட – புலம்பெயர் ஆதரவு – தமிழகத் தமிழர்களுக்கு பலம் சேர்த்து விடும்.

இக்காரணங்களால் தமிழர்கள் தனிப் பலம் பெற்று தனிநாட்டுக் கோரிக்கைகளில் வெற்றி பெறும் வாய்ப்பும் உருவாகி விடும் என்ற அச்சமே ஈழத்தில் மதம், சாதி ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்த ஆதிக்க சக்திகள் துடிக்கின்றன. இதற்கு தமிழர்கள் பலியாகி விடுவரா…?

 -தமிழ்லீடருக்காக வித்தகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*