viky

சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகிறது – வடக்கு முதல்வர்!

எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள், சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது போன்ற பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.

சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின் மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது.

இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும். அதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும் ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாதிடமான நம்பிக்கை வைக்க வேண்டும்.

நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்புபெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பை உண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும். எமது
தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து.

இன்று இளைஞர்கள், யுவதிகள் மட்டத்தில் நம்பிக்கையீனம் குடி கொண்டதால்த்தான் அவர்கள் சில தகாத வழிகளிலே செல்ல எத்தனிக்கின்றார்கள்.

பரீட்சைகளில் போதிய புள்ளிகள் இல்லாமை, மனதில் குறிக்கோள் இல்லாமை, குடும்பங்களுக்குள் ஏச்சுப் பேச்சுக்கள் என்று பல காரணங்களைக் கூறலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து சேர்வதால் அதனைப் பாவிக்கத் தெரியாமல் திண்டாடும் நிலைமையும் அவர்களை ஆத்திரம் அடைய வைக்கின்றது.

சிலர் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்து மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றார்கள். மது அருந்துகின்றார்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றார்கள். வன் செயலிலும் ஈடுபடுகின்றார்கள்.

அவர்கள் மனதில் குறிக்கோள் இல்லாததே இதற்குக் காரணம். ஒன்றில் உயர் கல்வி ரீதியாக நான் இந்தவாறாக வருவேன் என்ற ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அல்லது விளையாட்டு ரீதியாக அவ்வாறான குறிக்கோள்கள் இருக்கலாம் அல்லது வணிக ரீதியாகக் குறிக்கோளகள் இருக்கலாம்.

இல்லை என்றால் ஏதாவது ஒரு சமயம் சார்பான குறிக்கோள்கள் கூட இருக்கலாம் குறிக்கோள்கள் அவசியம் என்பது எம் எல்லோருக்குந் தெரியும். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கனவு காணச் சொன்னார். எமது குறிக்கோள்கள் செயற்படுத்தப்படுவன என்று கனாக் காண வேண்டும்.

அரசியல் ரீதியாக ஒரு குறிக்கோளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் நாம் இளைஞர் யுவதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோமானால் அவர்களை நாம் எமது சமூகத்தின் மிக வலுவான ஒரு அலகாக மாற்றியமைக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*