mano

தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்பில் மனோ கிண்டல்!

தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குறுமண்வெளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று வடக்கு கிழக்கில் நிறைய வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வீரம் பேசுவதைக் கேட்டால் கட்டபொம்மன், சங்கிலியன், ராஜராஜசோழன் போன்றோர் தோற்றுப்போவார்கள்.

ஆனால் நெருக்கடி நிலை காணப்பட்ட காலத்தில் இவர்கள் ஓடி ஒளித்துவிட்டார்கள். அந்த நேரத்தில் போராடியவர்கள் நானும் நடராஜா ரவிராஜும் தான். நாங்கள் இட்ட கூக்குரல் தான் ஐ.நா வரை ஒலித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களை கொழும்பிற்கு கொண்டுவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நானாவேன். காணாமல் போனோர் தொடர்பாக எவரும் எனக்கு பாடம் கற்பிக்கத் தேவையில்லை.

காணாமல் போனோர் அலுவலகத்தை எனக்குத் தரவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் நான் சொன்னதில் காரணம் இருக்கின்றது. நானும் இந்த அரசாங்கத்தை சேர்ந்தவன் என்ற வகையில் காணாமல் போனோர் தொடர்பாக தனது பொறுப்புக் கூறலிலிருந்து அரசாங்கம் தவறிவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் நான் அதை வேண்டாம் என்று சொன்னேன்.

காணாமல் போனோர் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாகும். அதன் அலுவலகம் ஜனாதிபதியின் கைகளில் இருப்பதுவே பொருத்தமானதாகும். ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பொறுப்பை ஒரு அமைச்சர் வேண்டாம் எனக் கூறியது இதுவே முதன்முறையாகும்.

மனோ கணேசன் விடுதலைப்புலிகளின் நினைவுகூறலை வேண்டாம் எனச் சொல்லிவிட்டதாக சிலர் சொல்லியிருக்கின்றனர். அது திரிவுபடுத்தப்பட்ட செய்தி.

யுத்த பூமியில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என அரசாங்கம் சொல்கின்றது. அதை உண்மையென்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கூட அவர்கள் அனைவரும் இலங்கையர்களாவர்.

தங்களுடைய பிள்ளைகள், சகோதரர்கள், கணவன்மார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு இறந்தவர்களை நினைத்து நினைவேந்தல் நடத்தும், கண்ணீர்விடும், அஞ்சலி செலுத்தும் உரிமை இருக்கின்றது என்று நான் கூறியுள்ளேன்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக புரிந்துணர்வு ஏற்பட்டால் தான் நாட்டில் நீதியும் நியாயமும் நிம்மதியும் சந்தோஷமும் வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. அதுவே உண்மை.

1981ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதில் ஏராளமான சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்காக குரலெழுப்பியவர் மகிந்த ராஜபக்ஷ. அவர்தான் இந்த நாட்டு அரசாங்கம் தனது மக்களை கொலை செய்கின்றதென ஜெனிவாவில் சென்று முறையிட்டார். சர்வதேச மன்னிப்பு சபையை இலங்கைக்கு வரவழைத்தார்.

அன்று மகிந்த செய்தது சரியென நான் சொன்னேன். அன்று உள்நாட்டில் நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காகவே மகிந்த ஜெனிவா சென்றார். அதேபோன்று தான் நாங்கள் இன்று உள்நாட்டில் நியாயம் கிடைக்கவில்லை என்று அயலவர்களிடம் சென்றிருக்கின்றோம்’ – எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*