vithakan

விவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு!

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக உள்ளது விவசாயிகளின் நிலைமை. “விவசாயக் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தேன்” எனப் பெருமையுடன் கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ விவசாயிகள் பற்றிக் கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்திருந்தாரேயானால், எரிபொருள்களின் விலையை – குறிப்பாக 44 ரூபாவுக்கு விற்பனையான மண்ணெண்ணெயை 101 ரூபாவாக அதிகரித்திருக்க மாட்டார்.

வடக்கு – யாழ்ப்பாணம் சந்தைகளில் தக்காளிப்பழம் (கிலோ) 20 ரூபா, பூசணிக்காய் 20 ரூபா, பச்சை மிளகாய் 40 ரூபா கோவா 40 ரூபா என பெரும்பாலான மரக்கறிகள் 50 ரூபாவுக்கும் உள்ளாகவே விற்பனையாகின்றன. வடக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. விரத நாட்களோ, கோயில் திருவிழாக்களோ இல்லாததால் அவற்றை சீண்டுவோரும் பெரிதளவில் இல்லை.

ஆனால், விற்பனையாகும் விலையிலும் ஒரு மடங்கு குறைந்த விலையே விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. உதாரணமாக தக்காளிப்பழம் கிலோ 20 ரூபாவுக்கு விற்பனையாகிறது. இதை கிலோ 10 ரூபாவுக்கே விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்வனவு செய்கிறார்கள். இது தவிர 10 கிலோவுக்கு ஒரு கிலோ கழிவு என்ற ரீதியிலும் இந்தக் கொள்வனவு அமைந்துள்ளது. விவசாயப் பொருள்களுக்கு கழிவு இல்லை என சந்தைகளில் விதிமுறைகள் எழுதப்பட்டுள்ளன. அவை சுவரில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் இல்லை. இவ்வாறான நிலையில் மண்ணெண்ணெயின் விலையை சுமார் ஒன்றரை மடங்கால் அதிகரித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்…?

மண்ணெண்ணெய் விலையேற்றம் தொடர்பில் கருத்துரைத்த நிதியமைச்சர் மங்கள சமரவீர “டீசலுடன் மண்ணெண்ணெயை கலந்து வாகனங்களை இயக்குகிறார்கள். இதனால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே டீசலுக்குச் சமமாக மண்ணெண்ணெயின் விலையை அதிகரித்தோம்” எனக் கூறுகிறார். விலையேற்றத்தால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்களுக்கும் – சமுர்த்தி உதவி பெறுவோருக்கும் பழைய விலையிலேயே – அதாவது 44 ரூபாவுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

“விவசாயம் இன்றி அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது” என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை அவர், அவர் சார்ந்தோர் நினைவில் கொள்ளவில்லை – அல்லது அவர்களைப் பொருட்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. காரணம் கடற்றொழிலாளர்களுக்கும், சமுர்த்திப் பயனாளிகளுக்கும் சலுகை காட்டும் இந்த அரசாங்கம் நாட்டுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளை மறந்து விட்டது. இதனால்தான் அவர்கள் தொடர்பில் எத்தகைய கருத்தையும் வெளியிடவில்லை.

டீசலுக்கு சமமாக மண்ணெண்ணெய் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் கொள்ளை லாபமடைய முடியுமே தவிர டீசலுடன் மண்ணெண்ணெய் கலப்போரின் வீதத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர முற்றாகத் தடுப்பது என்பது முடியாது. ஏனெனில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் பல.நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாகவே வழங்கப்படும். குறைந்த விலையில் வழங்கப்படும் இந்த மண்ணெண்ணெயை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது இலங்கையின் வியாபாரிகளுக்கு – வாகன உடைமையாளர்களுக்குத் தெரியும்.

போர் காலங்களில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அச்சமயத்தில் ச்ங்கங்களில் நிலவிய ஊழலும் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பொருட்களை சங்கக் கடைகளின் முகாமையாளர்களும், பல. நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமைகளும் எப்படிக் கொள்ளையிட்டன என்பதை பெரும்பலானவர்கள் அறிவர். ஊழல் மலிந்துபோன அரச திணைக்களங்களில் கூட்டுறவுத் திணைக்களமும் முன்னிலை வகிக்கிறது என்பதும் இங்கு நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். இதை அரசாங்கமும் நன்கறியும்.

ஆக இந்த விலையேற்றத்தின் மூலம் உண்மையில் பாதிக்கப்படப் போவது விவசாயிகளே. இதில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பேதம் யுத்தத்தால் பெரும் இழப்புக்களை – சொத்து அழிவுகளை சந்தித்து நிற்கும் தமிழர்கள் மேலும் பாதிக்கப்படுவர். வடக்கில் பெரும்பாலான விவசாயிகள் கிணற்று நீர்ப்பாசனத்தையே நம்பியுள்ளார்கள். இதனால் மேலும் மேலும் பாதிப்புக்களை வடக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கு என்ன தீர்வு வழங்கப்போகிறது அரசு?

– வித்தகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*