mullivaikkal

முள்ளிவாய்க்காலைச் சுற்றி நடப்பது என்ன?!

கன்னை பிரிந்து சண்டையிடும் பங்குப் பொருளாகியிருக்கிறது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் – வடக்கு மாகாண சபைக்கும் நடக்கும் இந்தப் பிரச்சினை சமரசத்துக்கு – தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு நிறைவுக்கு வருவதற்கு இன்று வியாழக்கிழமை வழி திறக்கப்பட்டுள்ளது. காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை பயணித்து இழப்புகள் – அழிவுகள் – காயங்கள் பலவற்றையும் சந்தித்து அனைத்து சாட்சிகளுமாக நிற்கும் முத்துக்குமார் மனோகர் (பசீர் – காக்கா), ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்), பாலிப்போடி சின்னத்துரை (யோகன் பாதர்) ஆகியோர் கூட்டாக ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் நாளை – 2016 ஆம் ஆண்டில் மாவீரர் துயிலும் இல்லங்களில் கடைப்பிடிக்கக்கூடிய சூழல் உருவானது. தங்கள் உறவுகளின் – தங்களுக்காகப் போராடி உயிர்நீத்த உத்தமர்களை நினைவுகூரக் கிடைத்த சந்தர்ப்பத்தை துயர் போக்கும் வடிகாலாக மக்கள் எண்ணினர். இதன் விளைவே எழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். எனினும் இராணுவத் தரப்பில் இருந்து எழுந்த அச்சுறுத்தல்களை தமக்கு சாதகமாக்கி நம் அரசியல்வாதிகள் – குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்நிகழ்வை அரசியல் மயமாக்கியிருந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளுக்கு தலைமை வகித்த இந்த அரசியல்வாதிகள் “யார் அடுத்த பிரபாகரன்” என்பது போல் தேசியத் தலைவரின் இடத்தில் தங்களைப் இருத்திப் பார்த்து நடந்து கொண்டனர். இவ்வாறான நிலையில் அடுத்த மாவீரர் தின (2017) நிகழ்வுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான முத்துக்குமார் மனோகர் (பசீர் – காக்கா) தலையிட்டார். மூத்த உறுப்பினர் என்ற ரீதியில் இல்லாமல் – மாவீரர் ஒருவரின் தந்தை என்ற ரீதியில் தலையிட்டிருந்தார். (இவரின் மகள் சங்கீதா – வீரவேங்கை அறிவிழி ஆக 2009 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்திருந்தார். அதேபோல மகன் ஒருவரும் எறிகணை வீச்சில் உயிரிழந்திருந்தார்)

“மாவீரர் நாளை அரசியல் மயப்படுத்தாதீர்கள் – அதன் மரபை மாற்றாது தளபதிகளுக்குப் பதிலாக மாவீரரின் பெற்றோரை பொதுச் சுடரேற்ற வையுங்கள், மாவீரர் நாள் உரை எதுவும் வேண்டாம்” என்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். விரும்பியோ, விரும்பாமலோ அவரின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். இதன் பிரகாரம் முன்னாள் போராளிகள், மக்கள் இணைந்த மாவீரர் நாள் ஒழுங்கமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. மாவீரர் இல்லங்களை அரசியல் கட்சிகள் சில பங்கிட்டுப் பொறுப்பேற்றபோதும் அரசியல் அலப்பறைகள் இல்லாது மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

மாவீரர் நாள் அரசியல் மயமானதால் குழப்பம் ஏற்பட்டது என்றால் இப்போது, முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை சமூக அமைப்புகளில் ஒன்றான யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கமைக்கப் போவதாக வெளியிடப்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது. மாணவர் ஒன்றியத்தின் இந்தத் திடீர் அறிவிப்புக்குப் பின்னணியில் புலம்பெயர் தளத்தில் இருக்கின்ற சில தனிப்பட்ட நபர்களின் ஆர்வக்கோளாறே காரணம் எனத் தெரியவருகிறது.

இந்தப் பின்னணி தெரியாமல் அவசரத்தனமாக ஓர் அறிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விட்டிருந்தது. மாணவர் ஒன்றியம் ஒழுங்கமைக்கும் நிகழ்வுகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்பதே அந்த அறிக்கை. புலம்பெயர் நிதியை நம்பியே அரசியல் நடத்தும் அந்தக் கட்சியின் அவசர அறிக்கை புலம்பெயர் அமைப்புகளை சீற்றமுற வைத்தன. அவை மெல்லப் போட்ட குட்டால் கலங்கிப் போன கட்சி மறுத்த மறுநாளே அந்நிகழ்வில் பங்கேற்பதாக அறிவித்தது. எனினும் எதற்காக புலம்பெயர் தளத்தில் உள்ள ஒரு சிலர் தங்களுடைய ஆர்வக்கோளாறு காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பயன்படுத்தினர் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாயக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையது. போர் காலத்திலும் சரி – அதன் பிற்பாடான இடர்காலத்திலும் சரி மக்களின் கருத்துக்களை – தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் பலமிக்க சக்தியாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இருந்தது – இருக்கிறது. இதற்கு அந்த அமைப்பின் கடந்தகால செயற்பாடுகள்தாம் காரணம். தமிழினத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்த பணிகள் மகத்தானவை – அளவிட முடியாதவை. ஆனால் இன்று அதன் நிலை…?

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழருக்கு சமமாக சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காலப்போக்கில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகமாக வேற்று இன மாணவர்களின் எண்ணிக்கை இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேசமயம் பதவிகளுக்காக அரசாங்கத்தை சார்ந்து பல்கலைக்கழக புத்திஜீவிகள் நடந்து கொள்கின்றனர். தமிழினத்துக்கு விரோதமான – தமிழரைப் புறக்கணிக்கின்ற கசப்பான சம்பவங்கள் சில கடந்த துணைவேந்தரின் காலத்தில் இடம்பெற்றன. இப்போதைய துணைவேந்தரின் காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டே உள்ளன.

மாணவர்கள் என்ற ஒற்றுமை சிதைக்கப்பட்டு அரசியல் கட்சிகள் – அரசியல்வாதிகளின் பின்னால் அணி அணியாக அவர்கள் பிரிந்துபோயுள்ளார்கள் நம் மாணவர்கள். இன்றிருக்கும் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சார்பு அணியினரே அதிகளவில் மாணவர் ஒன்றியத்தில் உள்ளனர் என மாணவர்களே கூறுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை நேரடியாக எதிர்கொள்வதற்காக அவர் சில கட்டமைப்புக்களை உருவாக்கி வேலை செய்தார். அதன் விளைவே அவர் பெற்ற வெற்றியில் கணிசமான செல்வாக்கு செலுத்தியது. இந்தக் கட்டமைப்புகளை இன்றளவிலும் அவர் தொடர்ந்து வருகிறார்.

துரோகியாக மக்களால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படும் இவர் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதுடன் மட்டுமின்றி – செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். முள்ளிவாய்க்காலில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்வு கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையாலேயே ஒழுங்கமைக்கப்பட்டன. வலிகள் சுமந்தவாறு மே 18 நாளில் போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளை அஞ்சலித்தனர். கடந்த ஆண்டும் வடக்கு மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சில விரும்பத்தகாத – கசப்பான சம்பவங்கள் சில நடந்தேறின. இது மக்களால் ஏற்பட்டதே ஒழிய – வடக்கு மாகாண சபையினரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.

இதைத் தொடர்ந்தே இப்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. அதன் பின்னணி குறித்து மேலே குறிப்பிட்டிருந்தோம். நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைப்புக் குறித்து வடக்கு மாகாண சபையினர் நேற்றுப் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்வில் பங்கேற்கவும் மாணவர் ஒன்றியத்தினர் மறுத்துவிட்டனர். அரசியல் கலக்காத முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கடைப்பிடிப்பு என்பது இம்முறையும் சாத்தியமற்றது. ஆனால் கடந்த காலத்தைப் போன்று அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நலன் கருதாத அஞ்சலி என்பது இம்முறையும் சாத்தியம். அதை வடக்கு மாகாண சபை நடத்தினால்…

இது இம்முறை வடக்கு முதல்வருக்கு சவாலாகவே இருக்கும் என்ற நிலையில் – அவருக்குப் பங்கம் ஏற்படாது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களின் கோரிக்கை அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் மதிப்புக்குரிய இவர்களின் கோரிக்கையின் கரு இம்முறையும் வடக்கு மாகாண சபையே நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டும் என்பதே. ஆனால் அவர்களின் கோரிக்கை நினைவேந்தல்களை குழப்பமின்றி – அரசியல் கலப்பின்றி நடத்த நினைவேந்தல் குழு ஒன்று அவசியம் என்பதே…

காரணம் வருடத்துக்கு ஒருமுறை மாற்றமடையும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைமையும் – 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றங்களுக்கு மாற்றத்துக்கு உள்ளாகும் வடக்கு மாகாண சபையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த நிரந்தரத் தீர்வாகாது. ஒட்டுமொத்த நினைவேந்தல்களையும் முறையாக – அரசியல் சுயநலம் இன்றித் தொடர்ந்தும் சந்ததி சந்ததியாக அஞ்சலிக்க அனைவரும் பேதங்கள் கடந்து பணியாற்ற வேண்டும். அதற்கான ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதுவே இன்றைய – காலத்தின் தேவை.

– தமிழ்லீடருக்காக வித்தகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*