sam

பட்டதாரிகள் பயிலுநர் தெரிவு வயதெல்லை தொடர்பில் சம்பந்தன் கோரிக்கை!

பட்டதாரிகளின் பயிலுநர் தெரிவின்போது, உச்ச வயதெல்லையை 40 வயது வரை அதிகரிக்கவும் மாவட்ட விகிதாசாரப்படி தெரிவுகள் இடம்பெறவும் வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணப்படும் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்திலேயே  இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் அக்கடிதத்தில், “வேலையற்ற பட்டதாரிகளை இரண்டு வருடப்பயிற்சியின்பின்பு நிரந்தர நியமனத்தை வழங்கும் பொருட்டு, மாவட்டச் செயலகங்களின் ஊடாக இடம்பெறுகின்ற நேர்முகப் பரீட்சையில் பட்டதாரிகளின் உச்ச வயதெல்லையை 40 வயது வரை அதிகரிக்க வேண்டும். மேலும், புள்ளிகள் மாவட்டமட்டத்தில் நிரைப்படுத்தப்பட்டு விகிதசம அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

கல்வித்தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்கு யுத்தம் மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கூடுதல் காலம் செலவிட நேர்ந்துள்ளமையால், இவ்வாறு வயதெல்லையை அதிகரிக்க வேண்டும்.

யுத்தம் காரணமாக, மேலதிக மாற்றுத் தொழிலாண்மைக் கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்கு கிடைக்காமல் போனமையால், அவர்கள் ஏனைய மாவட்டப் பட்டதாரிகளுடன் சமமாகப் போட்டிபோட்டுக் கூடுதல் புள்ளிகள்பெற முடியாதநிலை உள்ளது.

வடக்குக் கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வியாபார முயற்சிகள் அதிகம் இல்லாமையாலும் அந்தத் துறைகளில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் பெறும் சந்தர்ப்பம் இல்லாமையினாலும் அவர்கள் அரசதொழில் வாய்ப்புக்களையே எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் வேலைவாய்ப்பின்மை தேசியமட்ட அளவைவிட அதிகஅளவில் காணப்படுவதோடு, இப்பிரதேசங்கள் கல்வித்துறை மற்றும் அபிவிருத்தியிலும் ஏனைய மாவட்டங்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் தேசியமட்டத்தில் புள்ளிகளை நிரைப்படுத்தித் தெரிவுகளை மேற்கொண்டால், வடக்கு கிழக்கு பட்டதாரிகள் தெரிவுசெய்யப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*