Mullivaikal

யாழ்.பல்கலையில் நினைவுத்தூபி அமைக்க மீண்டும் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகளை, பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் உத்தரவின் பிரகாரம் குறித்த பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போரில் உயிர்நீத்த மாணவர்கள் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவாலயம் அமைக்கும் நடவடிக்கையை மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதற்கு ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்திருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக வளாக முன்றலிலுள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அதனை அமைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.

எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் உத்தரவின் பிரகாரம், கடந்த 25ஆம் திகதி இந்நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், நேற்று காலை குறித்த நினைவாலயத்தை முழுமைப்படுத்தும் பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டபோது, பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு அதனை நிறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு தடையேற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*