Dinesh-Gunawardena_5

சம்பந்தனுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்குகிறது மஹிந்த அணி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஒருவர் என்பது தற்போது தெளிவாகத் தெரிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இதன்காரணமாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை, அரசாங்கத்தின் எதிர்கட்சியாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொண்டுள்ளமையினால், எதிர்க்கட்சியாக வரும் தகுதி அதற்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எதிர்கட்சி தலைமைத்துவம் குறித்து அடுத்து வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தோல்வியைத் தொடர்ந்து சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைக் கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தினேஷ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோரின் கருத்துகள் இதனை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு எதிர்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நிரூபித்து விட்டனர். தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல இ அவர்கள் பிரதமரின் கைபாவை பொம்மைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில தெளிவுப்படுத்தும் போது மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*