army3

வடக்கில் இராணுவம் ஆக்கிரிமித்துள்ள 530 ஏக்கர் காணிக்கு 880 மில்லியன் ரூபாய் நிதியாம்!

வடக்கில் இராணுவம் வசம் உள்ள 530 ஏக்கர் காணிகளை விடுவிக்க, இராணுவம் கோரியுள்ள 880 மில்லியன் ரூபாய் நிதியைக் கொடுத்து மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரங்களை மீள்குடியேற்ற அமைச்சு தயாரித்து வருவதாக, அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வலி. வடக்கில் மீள்குடியமர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “போர் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற மக்களில் 60 ஆயிரம் மக்கள் தாயகம் திரும்புவதற்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு வருகை தரவுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மக்களுக்கும் மேலும் இங்குள்ள மக்களுக்குமாக மொத்தம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது. இதன்படி 2016ஆம் ஆண்டு 14 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 60 வீதமான நிதியில் 12 ஆயிரத்து 700 வீடுகள் கட்டப்பட்டன.

அதே போன்று 2017ஆம் ஆண்டு 9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆயிரம் வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்ட நிதியில் மீதம் ஏனைய உட்கட்டமைப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி வீடமைப்பு அதிகாரசபை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த கால நிலமைகளால் மக்கள் இழந்தவற்றில் ஏதாவது ஒன்றுக்கான இழப்பீட்டை வழங்குவதுக்கு நாம் தீர்மானித்துள்ளோம். இதற்காக எம்மிடம் 32 ஆயிரத்து 800 கோவைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் எமது இலக்கு 19 ஆயிரம் கோவைகளையாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அவற்றில் மாதாந்தம் 2 ஆயிரம் கோவைகள் வீதம் நிறைவு செய்ய வேண்டும். எனவே அதில் உள்ள சிறு சிறு தவறுகளை திருத்தி அவற்றை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டியதுடன் அதற்காக நடமாடும் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளோம்.
காணியற்ற மக்களுக்கு காணிகளை கொள்வனவு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசுக்கு 680 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இவற்றை விட மீளக் குடியமர்ந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதே பிரச்சனையாகவுள்ளது.

அதற்காக வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை அமைப்பதுக்கு கலந்தாலோசித்து வருகின்றோம். மாங்குளம், மட்டக்களப்பு, பூநகரி போன்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. தொழிற்சாலைகளில் கட்டாயமாக வடக்கில் இருந்து ஆயிரம் பேருக்கும் கிழக்கில் இருந்தும் ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு தொழில்களை வழங்குவர்களுக்கே வீட்டு திட்டத்தை அமைக்கும் பணியை வழங்கவுள்ளோம். 8 மாவட்டங்களிலும் உற்பத்தி வலயங்களை அமைக்கவுள்ளோம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*