hakeem

கண்டி வன்முறைச் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் ஹக்கீம் தகவல்!

முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் கலவரமாக மோசமடைவதற்கு, உளவுத்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே காரணமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்ட தூதுக்குழு நேற்று (வியாழாக்கிழமை) நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இனக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான வெறுப்புணர்வுகளை தூண்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கு சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே இனக்கலவரம் மென்மேலும் வளர்வதற்கு ஏதுவாக அமைந்தது.

அத்துடன் மூன்று தசாப்தகாலம் நீடித்த யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்த சூழ்நிலையில், சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் மீதான இனவாத செயல்கள் அரசியல் பொருளாதார உள்நோக்கங்களை வைத்து தீயசக்திகள் முன்னெடுத்து வருகின்றன.

ஆனால் உங்களுடைய நாடுகளில் இவ்வாறான கலவரங்கள் தோற்றம் பெறும் வாய்ப்பக்கள் காணப்பட்டால் உளவுத்துறை அதனை விரைவாக கண்டறிந்து விடுவார்கள். எமது நாட்டில உளவுத்துறையின் செயற்பாடு மந்தகதியிலேயே இருக்கின்றது.

மனித உரிமை மீறல் விடயங்கள் பற்றியும், யுத்தக் கைதிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அதுபற்றி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவதப்படுத்தும் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருவதோடு, பொது அமைப்புக்களும் குரல்கொடுத்து வருகின்றன.

மேலும் முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்களையடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் முதலீட்டாளர்கள் தயக்கமடைகின்றனர்.

அத்துடன் தேசிய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவதற்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனது பொறுப்பிலுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சைப் பொறுத்தவரை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரித்து வருகிறது. நிலத்தடி நீர் மாசடைந்துள்ள பிரதேசங்களிலும், சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களிலும் கடல் நீரை சுத்திகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு நவீன தொழில்நுட்ப பொறிமுறைகளை கையாண்டு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்” என்றார்.

இவ்விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் குறித்த விடயங்கள் மீது போதிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*