vinie

விடுதலைப் போராட்ட வீராங்கனை வின்னி மண்டேலா!

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் பெரு நெருப்பாகக் கொழுந்துவிட்டெரிந்த நாட்களில் “வின்னி” என்ற பெயரே வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியது.

ஆனால் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களோ அவளை விடியலை நோக்கி தம்மை வழிநடத்தும் துருவநட்சத்திரமாகப் பார்த்தனர்.

காண்பவரைக் கவர்ந்துவிடும் அந்தக் கறுப்பழகுக்குள் விடுதலை வேட்கை பொங்கிப்பிரவாகித்தது. ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக வெள்ளை இன முதலாளித்துவவாதிகளின் கொடிய சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு வறுமையிலும், பட்டினியிலும் நோயிலும் வாடிய தென்னாபிரிக்க மக்களின் தென்னாபிரிக்க காங்கிரஸில் ஒரு புரட்சிவாதியாக இணைவதன்மூலம் அவளின்விடுதலைப் போராட்டப் பங்களிப்பு ஆரம்பமாகிறது. அவளின் தீவிர இலட்சியப்பற்று, இடதுசாரி தத்துவங்கள் தொடர்பான பரந்த அறிவு, வீரம் என்பன வெகுவிரைவிலேயே அவளை முன்னணிப்போராளியாக்கியது.

தொன்மைமிக்க வரலாற்றையும், பண்பாட்ட நாகரிகத்தையும் கொண்டு இயற்கையுடன் இணைந்த அற்புதமான வாழ்வைக்கொண்டவர்கள் ஆபிரிக்க மக்கள். அடர்ந்தோங்கிய வனங்களும், என்றுமே வற்றாத நீண்டநதிகளையும் கொண்ட அந்த ஆபிரிக்க மண்ணின் மைந்தர் தமது தாயக மண்ணைத் தெய்வமாகப் போற்றிப் பாதுகாத்து அதன் வளங்களை அனுபவித்து வாழ்ந்தனர்.

அதன் ஒப்பற்ற வளங்களைச் சூறையாட அங்கு போயிறங்கிய ஐரோப்பியர்கள் பொன்விளையும் அப்பூமியை ஆக்கிரமித்தனர்.

தமது மண்ணைக்காக்க எதிர்த்துப் போராடிய பழங்குடி மக்கள் குழுக்களாக, குலம் குலமாக அழிக்கப்பட்டனர். வெள்ளையரின் துப்பாக்கிகளின் முன் சுதேசிகளின் வில்லுகளும், அம்புகளும், ஈட்டிகளும் தோற்றுப்போயின. ஆண், பெண், குழந்தைகள், முதியோர் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் விரட்டிப்பிடிக்கப்பட்டு விலங்கு பூட்டப்பட்டு அடிமைகளாக அமெரிக்கக் கரும்புத்தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஆபிரிக்க மக்களின் வளமான பூமி ஆக்கிரமிக்கப்பட்டது. வெள்ளையரின் பண்ணைகள் உருவாகின. அம்மண்ணின் உரிமையாளர்கள் பண்ணையடிமைகளாக்கப்பட்டுச் சவுக்கு வீச்சில் வேலைவாங்கப்பட்டனர். அம் மக்கள் தாயாகப் போற்றிவணங்கிய மண் தோண்டப்பட்டு, நிலக்கரிச் சுரங்கங்களும், தங்கச் சுரங்கங்களும் அமைக்கப்பட்டு, அங்கும் கறுப்பின மக்கள் கொடுமையான முறையில் வேலைவாங்கப்பட்டனர்.

நகரங்களின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் அவர்களின் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் வெள்ளையர் வாழும் நகரப்பகுதிகளுக்கோ, பூங்காங்களுக்கோ செல்லமுடியாது. பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டவையில் மட்டுமே பயணிக்கமுடியும்.

வளத்தோடும், செழிப்போடும் வாழ்ந்த அந்த மக்களின் வாழ்வு வறுமை, பட்டினி, நோய், அவலச்சாவு என்பவற்றால் நிரப்பப்பட்டன.

அநீதிகளுக்கெதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்த போதெல்லாம் கண்மூடித்தனமான வெளியுடன் அம் மக்கள் அழிக்கப்பட்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.

அங்குமிங்கும் நடந்த போராட்டங்கள் கொடிய முறையில் அடக்கப்பட்ட நிலையிலேயே நாடு பரந்தரீதியில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் உருவாக்கப்படுகிறது.

லண்டனில் உயர்கல்வியை முடித்துகொண்டு திரும்பிய நெல்சன் மண்டேலா ஜோகன்னஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயில்கிறார். அங்கு இடம்பெற்ற கறுப்பின மக்களுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுக்குத் தலைமையேற்கிறார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியின் தலைவராகப் பொறுப்பேற்ற நெல்சன் தீவிரபோராட்டங்களில் இறங்குகிறார்.

அங்கு தான் சுறுசுறுப்பும், வீரமும் தீவிர இலட்சியப் பற்றும் கொண்ட வின்னியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

போராட்டத்தில் ஏற்பட்ட உறவு காதலாக மலர்கிறது. 1958 இல் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தடைசெய்யப்படுகிறது. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த குற்றச்சாட்டில் மண்டேலா கைது செய்யப்பட்டு சிறைசெய்யப்படுகிறார்.

மண்டேலாவையும் தோழர்களையும் விடுவிக்கக்கோரிய பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. வின்னி அவற்றில் தீவிரமாகப் பங்குகொள்கிறாள்.

நான்குவருடங்களின் பின்னர் நெல்சன் விடுவிக்கப்படுகிறார். ஜோகன்னஸ்பேக்கில் கறுப்பின மக்கள் நடத்திய பேரணி மீது ஆபிரிக்க அரச படைகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அதே இடத்தில் 69 பேர் கொல்லப்படுகின்றனர். மண்டேலா உட்பட 150 பேர் கைதுசெய்யப்படுகின்றனர். வின்னி தலைமையேற்று நடத்திய நீண்ட போராட்டங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

வின்னி தென்னாபிரிக்க இளைஞர், யுவதிகளின் தலைவியாக எழுச்சி பெறுகிறார். பேரணி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் காரணமாக நாடெங்கும் தன்னிச்சையான ஆயுதக்கிளர்ச்சிகள் வெடிக்கின்றன.

அக்குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஆபிரிக்கத் தேசிய விடுதலை இராணுவம் உருவாக்கப்படுகிறது. அதன் தலைவராக நெல்சன்மண்டேலா தெரிவுசெய்யப்படுகிறார்.

தீவிரமான தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் நெல்சன்மண்டேலா தலைமறைவாக வேண்டிய நிலை எழுகிறது. அந்நிலையில் களத்தில் நின்று பல்வேறு குழுக்களையும் வழிநடத்துவதில் வின்னி துணிச்சலுடன் இறங்கிச்செயற்பட்டார்.

1962இல் நெல்சன்மண்டேலா கைது செய்யப்படுகிறார். 1964இல் ஆயுள் தண்டனை நிறைவேற்றப்பட்டு, “ராபன்” தீவில் உள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறார். 27 வருடங்கள் தனிமைச் சிறையில் அவரின் வாழ்வு கழிகிறது.

இந்த 27 வருடங்கள் வின்னியின் சாதனைகள் உச்சத்தைத் தொட்ட காலப் பகுதியாகும்.

ஒருபுறம் சிறைப்படுத்தப்பட்ட தலைவனின் காதல் மனைவியாக அவரைப்போய் சந்தித்து அவரை ஆறுதல்படுத்துபவளாகவும், இன்னொரு புறம் ஒரு புரட்சித்தலைவியாகத் தென்னாபிரிக்க விடுதலை இராணுவத்தைத் தன் தலைவனின் ஆலோசனைக்கேற்ற வகையில் நெறிப்படுத்துபவளாகவும் மேலும் மக்கள் போராட்டங்களை எழுச்சியுடன் வழிநடத்தி வெள்ளை அரசை அதிரவைப்பவளாகவும் வின்னி வகித்த பாத்திரங்கள் அற்புதமானவை.

“ராபல் தீவு” ஆபிரிக்கப்பெருநிலப்பரப்பிலிருந்து தொலைதூரத்தில் கடல்நடுவே அமைந்ததீவு. அங்கு பகலில் கல்லுடைக்கும் கடும்வேலை. இரவில் பூட்டப்பட்ட சிறு அறையில் படுக்கை.

ஆபத்தான படகுப் பயணம். ராபல் தீவிலோ சிறை அதிகாரிகளின் கெடுபிடிகள் காவலர்கள் முன்னிலையிலேயே சந்திப்புக்கள்.

இத்தகைய நெருக்கடிகள் மத்தியிலும் அவரின் கட்டளைகளைப் புரிந்து தேசிய காங்கிரஸ் தலைவர்களிடம் கொண்டுசெல்வதில் அவள் வகித்த பாத்திரம் ஒப்பற்றது. இளமைக்கால வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு விடுதலையை மட்டும் நெஞ்சில் சுமந்து அவள் பணியாற்றினாள்.

அதேவேளையில் வெள்ளையரின் இனவாதிகள் ஆபிரிக்க மக்கள் மீது கொண்ட அநீதிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பதில் இளைஞரை வழிநடத்துவதில் தீவிர அக்கறைகாட்டினாள்.

1988ல் காசநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிய நிலையிலும் நெல்சன் சரணடைய மறுக்கிறார்.

வெள்ளையரை ஈடாடவைக்குமளவுக்கு நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கின்றன. உலகநாடுகளின் அழுத்தமும் அதிகரித்த நிலையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன.

1990 இல் நெல்சன்மண்டேலா விடுதலை பெறுகிறார்.

1994ல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுகிறார்.

அதையடுத்து சமாதானத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட நல்லிணக்க விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் வின்னி வெள்ளையினச் சிறுவர்களைக் கடத்தியதாகக் குற்றம்சுமத்தப்படுகிறார்.

நெல்சன் தன் காதலியும், போராட்டத் தோழியும், இரண்டாவது மனைவியுமான வின்னியை விவாகரத்து செய்கிறார்.

2013ல் நெல்சன்மண்டேலா காலமான போது வின்னிக்கு அவரின் மனைவிக்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை.

விடுதலைப் போராட்டங்களை முன்னர்த்தலில் செல்வதில் பாரிய பங்களிப்பை வழங்கிய வீரர்களை, விடுதலையின் பின்பு மறப்பதும், மறைப்பதும் வரலாறு முழுவதுமே காணமுடியும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் அரிய தியாகங்களைச் செய்த சூரியாசென், கல்பனாதத், ப்ரிதிலாதா, சந்திரசேகர ஆசாத், அரவிந்தர், வாஞ்சிநாதன் போன்ற ஒப்பற்ற ஆயுதப் போராட்ட வீரர்கள் இந்திய வரலாற்றில் இலட்சியம் செய்யப்படுவதை நாம் காணமுடியும்.

எப்படியிருப்பினும் “வின்னி” ஆபிரிக்க மக்களின் நெஞ்சில் எப்போதுமே வீடுதலை வீராங்கனையாக வீற்றிருப்பாள்.

– தமிழ்லீடருக்காக அக்னிகுமாரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*