mahinda_sampanthan1

சம்பந்தனின் பதவி பறிபோகும் நிலை ஏற்படலாம் – மஹிந்த அணி எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றால் எதிர்கட்சித் தலைவரது பதவியில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பாதுகாப்பதற்கு முயற்சி செய்தால் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கப்போகும் அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு கடினமாகும் என்ற எச்சரிக்கையையும் ஒன்றிணைந்த எதிர்கட்சி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளே இந்தப் பிரேரணையின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகளாக அமையும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இதுவரை கூட்டமைப்பு இறுதியான முடிவொன்றை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளல் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் விமர்சித்தார்.

“எதிர்கட்சித் தலைவரது பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு வந்தால் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அடுத்தகட்சி எதிர்கட்சியாக மாறிவிடும். இவ்வகையாக மாற்றங்களை ஏற்படுத்தும் தினமே நாளைய தினமாகும்.

இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு வாக்குறுதியையும் அளிப்பதற்கு தயாராகுவார். ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சியை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவி கிடைத்தால் எவ்வகையான கொள்கை அந்த அரசிற்குள் அமுல்படுத்தப்படும் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்” என்றார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தால் அடுத்துவரும் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலை செய்யமுடியாத நிலைமையே ஏற்படும் என்று எச்சரித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பாதுகாப்பதற்கு முடிவெடுத்தால் எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தமது பகுதிகளிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்ற பிரச்சினை ஏற்படும். அதேபோல இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

அதாவது கண்டி பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் அரசாங்கம் வாய்ப்புக்களை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள், தங்களது மக்களது சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதியளித்த அரசாங்கம் மீது நம்பிக்கை தெரிவித்து எவ்வாறு அவர்கள் மக்களுடன் கொடுக்கல் வாங்கலை செய்வார்கள் என்ற பிரச்சினையும் எழும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*