tn

கரவெட்டி பிரதேசசபை வாக்கெடுப்பு; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது மக்கள் விமர்சனம்!

கரவெட்டி பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐங்கரன் தவிசாளராக தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொன்னையா தெரிவாகியுள்ளார். பெரும் விலைகொடுத்து உறுப்பினர்களை வாங்கி, தவிசாளர் பதவியை பெற்றுவிட, சுதந்திரக்கட்சி பெரு முயற்சியெடுத்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த வெற்றி கவனிப்பிற்குரியதாகிறது.

இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பது தீர்மானிக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சுதந்திரக்கட்சி மற்றும் ஈ.பி.டி.பி என்பன இரகசிய வாக்கெடுப்பை கோரின. பத்து உறுப்பினர்கள் இதை ஆதரித்தனர்.

இந்த சமயத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட இராமநாதன், இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பதை அறிய இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அடம்பிடித்தார். எனினும், சட்டத்தில் இல்லாத ஒரு நடைமுறையை செயற்படுத்த முடியாதென உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போகவுள்ளதாக இராமநாதன் கூற, அது உங்கள் உரிமை, அதை செய்யுங்கள் என கூறிய ஆணையாளர், வாக்கெடுப்பை ஆரம்பித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தேக – மொத்தம் – பதினொருவர் பகிரங்க வாக்கெடுப்பை கோரினர். இதன்படி பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐங்கரன் 11 வாக்குகளையும், சுதந்திரக்கட்சியின் இராமநாதன் 10 வாக்குகளையும் பெற்றனர். உபதவிசாளராக பொன்னையா போட்டியின்றி தெரிவானார்.

தென்னிலங்கை கட்சியொன்று வடக்கில் ஆட்சியை பிடிக்க முயற்சித்த ஆபத்தான தருணத்திலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

நிகழ்வை அவதானிக்க வந்திருந்த பொதுமக்கள், நேரடியாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை சூழ்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலைமையேற்பட்டது.

நன்றி – தமிழ் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*