sangeethaa

ஓ… சங்கீதா… நீ என்ன குற்றம் செய்தாய்…?

கருவில் இருக்கையிலேயே தந்தையைப் பிரிந்தாய்… தாயின் அரவணைப்பில் மட்டுமே மகிழ்ந்திருந்தாய்… இப்போது தாயையும் இழந்து பரிதவித்து நிற்கின்றாய்… உண்மையில்  நீ… செய்த குற்றம் என்ன…? ஈழத் தமிழ்க் குழந்தையாகப் பிறந்ததைத் தவிர…

அமானி ராயிதா, தினுல்யா சனாதி பிறந்த இனத்தில் பிறந்திருந்தால் தந்தையின் மடியில் தவழ்ந்திருப்பாயே… அவரின் மார்பிலேயே தூங்கி வளர்ந்திருப்பாயே…! அண்ணனும் நீயுமாக போட்டிபோட்டு தந்தையைத் தூக்கக் கேட்டு அடம்பிடித்திருப்பீர்களே…! உங்கள் தாய்க்காக இந்தளவு சிறிய வயதில் கொள்ளிக்குடத்தை அண்ணன் தூக்கி நடந்திருக்க மாட்டானே…

பாவியரின் வன்செயல்களால்தானே தந்தை ஆயுதத்தைத் தூக்கினார். அதனால்தானே  செய்யாத குற்றத்துக்காக உனது தந்தையை சிறையில் அடைத்தார்கள்… இதனால்தானே உனது தாயும் நோயுற்றாள்…! அதனால் சாவையும் அழைத்தாள்…

அரசியல் கைதியான ச.ஆனந்தசுதாகரனின் 10 வயதேயான மகள் சங்கீதா தாயின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தந்தையின் பின்னால் சென்று சிறைச்சாலை வாகனத்தில் ஏறி சிறை செல்ல முயன்றாள். இந்தச் சம்பவத்தை அறிந்து நெஞ்சம் கரையாதவர்கள் இல்லை. ஆனால் இந்தச் சிறுமியின் பரிதவிப்பை – அநாதரவு நிலையைக் கண்டும் – அறிந்தும் நெஞ்சம் கரையாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… அப்படி நெஞ்சம் இல்லாதவர்களும் இருக்கிறார்களா என்று எண்ணவும் கூடும்… இருக்கிறார்கள்… ஒரு சாரார்… ஈவிரக்கமற்ற இலங்கையின் ஆட்சியாளர் கூட்டம். இரண்டாவது சாரார் நம் அரசியல்வாதிகள் – ஆம் நம் தமிழ் அரசியல்வாதிகளேதான்.

dinulya sanathi (2)ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்திருந்தால் தந்தையைப் பிரிந்த அந்தப் பிஞ்சின் துன்பத்தை – சோகத்தை – துயரத்தை – கவலையை உடனடியாகவே தீர்த்திருக்க முடியும். கொலைக் குற்றவாளிக்குக்கூட இரக்கம் காட்டி அதிக பிணைநேரம் வழங்க இடமளித்த இலங்கைச் சட்டம். அரசியல் கைதி ஒருவருக்கு ஆக வழங்கியது மூன்றே மூன்று மணி நேரம்தான். ஆனந்த சுதாகரனுக்கு வழங்கப்பட்ட அந்த 3 மணி நேரப் பிணையை அதிகரித்து இருக்க முடியும். ஆனால் அவர்தான் தமிழராக இருந்து விட்டாரே! எவ்வாறு பிணை நேரத்தை அதிகரித்து வழங்குவது என்று சட்டம் நிதானித்து இருக்ககூடும்.

தன்னைக் கொல்ல வந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சி.ஜெனிவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். ஆனால் அந்த மன்னிப்பின் மூலம் தன்னைக் கொல்ல வந்தவரையும் மன்னித்தவர் என்பதால், உலகம் தன்னைக் கடவுளாகக் கொண்டாடும் என்று எண்ணினாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வாய்கிழிய நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளை விடுவிப்பதிலும் நல்லிணக்கம் தங்கியிருக்கிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.

amani rajitha (2)தேர்தல் பிரசாரக் காலத்திலும், பாடசாலை நிகழ்வுக்கு சென்ற போதும் நண்பிகளாகிப் போன அமானி ராயிதா, தினுல்யா சனாதி என்ற சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் மழலைப் பேச்சில் மகிழந்திருந்த ஜனாதிபதிக்கு, தமிழ்ச் சிறுமியான சங்கீதாவின் அழுகை மொழி இனிக்காதுதான். அதனால்தான் தாயை இழந்து தந்தையைப் பிரிந்து அநாதரவாக நிற்கும் சிறுமி சங்கீதாவின் குரல் அவரின் காதை எட்டவில்லை. தன்னைக் கொல்ல முயன்றவருக்கும் மன்னிப்பு அளித்த ஜனாதிபதியால் தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து அநாதைகளாக நிற்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்காக பொது மன்னிப்பு வழங்க முடியாதா என்ன?

துரோகிக்கும் சிலை திறக்கும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஏன் வலியுறுத்தி சொல்லத் துணியவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் நடக்கிறது என்றவுடன் உடனடியாக ஜெனிவாவுக்கு பறந்த அதிகாரத்தில் உள்ள – இல்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னமும் அரசியல் கைதிகள் உட்பட வருடம் தாண்டியும் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்கூட கண்ணுக்குத் தெரிவதில்லை. நாடாளுமன்றம் சென்று வலுவாகக் குரல் எழுப்பி – அரசுடன் ஒத்துப் போகும் இந்தத் தருணத்தில் அதை மிரட்டிக் காரியம் சாதிக்கத் துப்பில்லாதவர்கள்  ஜெனிவா சென்று சாதிக்கப் போவது எதை?

மனிதாபிமானப் போர் என்ற போர்வையில் ஈவிரக்கமற்ற அரசும் – அதன் இயந்திரமான முப்படைகளும் பொலிஸூம் நடத்திய கொடூரங்கள் உலகறியும். அவை இப்போது முடிந்த கதை – வேறு கதை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த தியாகங்களை சுமந்து நிற்கிறோம் என்று நாடகமாடும் அரச பரிவாரங்கள் முதலில் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் தந்தைகளின் வருகைக்காக சங்கீதாக்கள் காத்திருக்கின்றனர்…!

– தமிழ்லீடருக்காக வித்தகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*