viky

திடீர் வேலைநிறுத்தம் தொடர்பில் வடக்கு முதல்வர் கருத்து!

வடக்கிலிருந்து பயணிப்பவர்களில் 99 வீதமானவர்கள் தமிழர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களை புறக்கணித்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, பேசித்தீர்க்க முன்வாருங்கள் என, பேருந்து உரிமையாளர்களுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும், வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து நடத்துகின்ற நிரந்தர வழித்தட அனுமதிப் பத்திரம் வழங்கும் வைபவம் யாழில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”திடீர் வேலைநிறுத்தங்கள் தெருவில் போகும் ஒருவனிடம் கொள்ளை அடிப்பது போன்றது. திடீரென்று கத்தியைக் காட்டி ‘தா அல்லது குத்தித் தரையில் வீழ்த்தி விடுவேன்’ என்பது போன்றதே திடீர் வேலைநிறுத்தங்கள். முதலில் எமது குறை பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். கலந்துரையாட வேண்டும்;. மேலதிகாரிகள் கூறுவதில் உண்மையுள்ளதா என்பது ஆராய்ந்தறியப்பட வேண்டும். அதன் பின்னரே நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்.

நாம் கோரினால் மற்றவர் அதைத் தர வேண்டும். இல்லையென்றால் உடனே வேலைநிறுத்தம் என்ற எமது பழக்கத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். மற்றைய அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்த்து நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கறுப்பு கைப்பட்டி அணிந்து வேலைக்குச் செல்வார்கள். தமது வேலைநிறுத்தங்களால் மக்களோ, தொழில் முயற்சிகளோ, கல்வி நடவடிக்கைகளோ பாதிக்கப்படக்கூடாது என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள். 2500 ஆண்டு பாரம்பரியம் பெற்ற தமிழரோ திடீர் வேலை நிறுத்தமே முறையென்று நடந்து கொள்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*