file
file

காணாமல் போனோர் அலுவலகத்தை திருமலையிலும் மக்கள் புறக்கணிக்கின்றனர்!

காணாமல் போனோருக்கான அலுவலக உறுப்பினர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் தமது பிராந்திய அமர்வுகளை நடத்தவுள்ள நிலையில் இதனால் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்துள்ள மக்கள் அமர்வை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இறுதிகட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் தலைவராக சட்டத்தரணி சாலிய பீரிஸ் செயற்படும் அதேவேளை ஏனைய ஆறு ஆணையாளர்களும் இதற்குள் அடங்குகின்றனர். இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட தென் மாகாணங்களிலும் பிராந்திய அமர்வுகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைய ஏற்கனவே மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் காணாமல் போனோருக்கான அலுவலக உறுப்பினர்கள் அமர்வுகளை நடத்தியுள்ளனர். இதேவேளை அந்த ஆணைகுழுவின் அடுத்தக்கட்ட பிராந்திய அமர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் காணாமல் போனவர்களின் உறவுகளிடமும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கருத்துக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் குறித்த அமர்வு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*