breaking-news

ரணிலுக்கு எதிரான பிரேரணை தோல்வி! அமைச்சர்கள் பதவி பறிபோகுமா? (இணைப்பு 02)

பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விகண்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 வரை நடைபெற்றது.

9.30 மணிக்கு பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

பகிரங்கமாக நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பின் போது ஒவ்வொரு உறுப்பினர்களும் பெயர் கூறி அழைக்கப்பட்டபோது தமது நிலைப்பாட்டினை அறிவித்தனர்.

இதன் அடிப்படையில்,
பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் வழங்கப்பட்டன. 26 உறுப்பினர்கள் விவாதத்தை புறக்கணித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கான ஆணை கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இதனிடையே ஆளும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் பெறுகின்ற அமைச்சர்கள் சிலரும் ரணிலுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன அடங்கலான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.

14 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சுதந்திர கட்சி அமைச்சர்கள் நான்கு பேர் உட்படஇ 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*