viky

சமாதானத்தை கட்டியெழுப்பும் சபைக்கு வடக்கிலிருந்து ஒருவரை நியமிக்க சி.வி.வி கோரிக்கை!

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையின் அங்கத்தவராக வடக்கு மாகாண சபையின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ளுமாறு நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கீரிமலையில் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் சமாதானத்தைக் கட்டி எழுப்பும் சபை நிகழ்ச்சிகளில் உங்கள் ‘ஓணூர்’ அலுவலகம் ஒரு அலகாகும். அந்த சபையில் எமது வட. மாகாண சபையின் பிரதிநிதி ஒருவரை அங்கத்தவராக்க தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நாங்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். எமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை நாம் அடையாளங்காணாமல் மற்றவர்களை அடையாளப்படுத்தச் சொல்வது முறையாகாது. ஆகவே எம்மை அல்லது எமது பிரதிநிதியை ஐ.நா.சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையின் ஒரு அங்கத்தவராக்குங்கள் என வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*