srikayan

வித்தியா கொலை விவகாரம்; உதவி பொலிஸ் அதிகாரியை கைது செய்ய பணிப்பு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச்சென்றமை தொடர்பிலான விசாரணைகளுக்காக உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஶ்ரீ கஜனை உடனடியாகக் கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.

மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார், யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பிலான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் வழக்கு தொடுநர் சார்பில் ஆஜரான குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஶ்ரீ கஜனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் தன்மைக்கு அமைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதவான் அவரை உடனடியாகக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*