leader

ஆமோனிய மக்களின் உணர்வுகளுடன் நாமும்…

1915ஆம் ஆண்டு ஓட்டமான் சாம்ராஜ்யம் என அழைக்கப்பட்ட துருக்கி சின்னஞ்சிறு ஆமோனியா மீது பெரும் படையெடுப்பை மேற்கொண்டது. அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆமோனியப் புத்திஜீவிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். மக்கள் பொங்கியெழுந்தனர். ஒரு பெரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராக சிறிய தேசத்தின் மக்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.

மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாத துருக்கிய அரசு பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் 15 இலட்சம் ஆமோனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். துருக்கி இன்றுவரையில் அவை உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற மரணங்கள் எனக் கூறி இனப்படுகொலைக்குற்றச்சாட்டை மறுத்துவருகிறது.

எனினும் அண்மையில் பாப்பரசர் ஆமோனியாவில் இடம்பெற்றது இனப்படுகொலை எனப் பிரகடனம் செய்தார். அண்மையில் கொண்டப்படவுள்ள ஆமோனியப் படுகொலை நினைவு வைபத்தில் அங்கு உயிரிழந்த 15 இலட்சம் மக்களையும் புனிதர்களாகப் பிரகடனம் செய்ய ஆமோனிய திருச்சபை முடிவெடுத்துள்ளது.இதில் ரஷ்ய அதிபர், பிரான்ஸ் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்வதன் மூலம் இனப்படுகொலையைக் கண்டிகிக்கும் தீர்மானத்திற்கு உலக அங்கீகாரத்தை வழங்கவுள்ளனர்.

100 ஆண்டுகளின் பின்பே உலகம் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களைப் புனிதர்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது ஒரு இனப்படுகொலை என்பதை வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்துள்ளது.

ஆனால் சிங்கள தேசமோ, துருக்கியைப் போன்றே அதை ஏற்கப் பிடிவாதமாக மறுத்துவருகிறது. கொலைகாரர்கள் தங்கள் குற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் காலம் கண்மூடித் தூங்கிவிடுவதுமில்லை. அது தன் கடமையை நிறைவேற்றியே தீரும்.  எமது மக்கள் இலங்கைப் படைகள் மேற்கொண்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களைப் புனிதர்களாக ஏற்றுக்கொண்டு அஞ்சலித்து வருகின்றனர்.

எந்தக் கொடிய அடக்குமுறையாலும் அந்த உணர்வுகளை என்றும் அழித்துவிட முடியாது. எனவே ஆமோனிய மக்களின் மழுங்கடிக்கப்பட முடியாத உணர்வுகளுடன் தமிழ் மக்களாகிய நாமும் கரம் கோர்க்கிறோம்.

“எங்களுக்கிடையே உயர்ந்த மலைகள்,
எழுந்து நிற்கலாம்,
அகன்ற சமுத்திரங்கள் விளித்திருக்கலாம்!
நாடுகளின் எல்லைக் கோடுகளால்
எங்கள் வாழிடங்கள் பிரிக்கப்பட்டிருக்கலாம்,
ஆனால் –
எமது கரங்கள் என்றுமே உறுதியாக
இணைக்கப்பட்டிருக்கின்றன.”
– மா ஓ சேதுங் கவிதைகள் –

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*