leader

சந்திரசிறியின் அன்பும் கருணையும் – புருஷோத்மன்

“தான் ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை எனவும் தான் தொடங்கிய 13 அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவு செய்யப் போவதாகவும் தான் அன்புடனும் கருணையுடனும் செயற்படப் போவதாகவும் வடமாகாண ஆளுநராக மீண்டும் எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதியால் தெரிவாகியுள்ள மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அவர் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ அவர்களின் நியாய ரீதியான கோரிக்கைகளையோ என்றும் பொருட்படுத்தியதில்லை. இனியும் அவர் பொருட்படுத்தப் போவதுமில்லை என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.

அவர் தனது மேலாளர்களின் கட்டளைகளை கேள்விக்கு இடமின்றி நிறைவேற்றுவதும், ஏனையோர் தனது கட்டளைகளைக் கேள்வி கேட்காமல் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதும் இராணுவ வழிமுறை.

எனவே அவர் மக்களையோ, மக்கள் பிரதிநிதிகளையோ பொருட்படுத்தாமல் விடுவதில் ஆச்சரியம் எதுவுமுவில்லை.

ஆனால் அவரின் அன்பு பற்றியும் கருணை பற்றியும் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது.

மாகாண சபையின் நிர்வாகத்திற்குள் செயலாளர்கள் மூலம் மாகாணசபைக்கு அப்பாற்பட்ட ஒரு நிர்வாகத்தை நடத்தி மாகாணசபையைச் செயலற்றதாக்குவது, மாகாண சபையின் நியதிச் சட்டங்களை அங்கீகரிக்காது இழித்தடிப்பது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பெயர்களில் அபகரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவது. வடக்கில் ஒரு இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது என அவர் தமிழ் மக்கள் மேல் காட்டிய அன்பு அபரிதமானது. அதாவது தமிழ் மக்களை அடிமைச்சங்கிலி தொழில்களை முடக்கி, குடியிருப்புக்களை பறித்து ஒரு பெரிய அழிவுக்குள் தள்ளும் வகையில் அவரின் அன்பு விரிவடைந்தே செல்லும்.

அவரின் கருணையை எதிர்பார்த்து கையேந்தி நிற்கும் வக்கற்ற கூட்டமல்ல தமிழ் மக்கள் தமிழ் மக்களாகிய நாம் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமக்கே உரித்தான எமது உரிமைகளுக்காகப் போராடுகிறோம். எமக்கு எவரும் கிள்ளித் தந்து கருணை காட்டத் தேவையில்லை.

எப்படியிருப்பினும் வடக்கு மாகாணசபை தனக்குரிய அதிகாரங்களுடன் இயங்க மேஜர் ஜெனரல் சந்திரசிறி அனுமதிக்கப் போவதில்லை என்பதையும், வடமாகாண மக்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ மேலாதிக்கத்திற்குள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப் போவதையும் அவரின் கருத்துக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.

ஆட்சிக் கட்டில் எவர் இருந்தாலும் எப்படி நடந்தாலும் தமிழ் மக்கள் அதிகாரத்துக்கோ ஏமாற்றுக்களுக்கோ பணிந்து விடப்போவதில்லை என்பதை அவர்கள் உணர மறுப்பது தான் பரிதாபமாகும்.

தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*