dak

தமிழக உணர்வுகளைச் சிதைக்க டக்ளஸ் சதி – மாரீசன்

அண்மையில் வட பகுதியில் இடம்பெற்ற மீனவ அமைப்புக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் இந்திய மீனவர்கள் இலங்கைக்கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிப்பது தொடர்பாக அலசி ஆராயப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாகவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென நீரியல்வளத்துறைப் பணிப்பாளருக்கும், பொலிஸாருக்கும் கட்டளையிட்டுள்ளார்.

ஏற்கனவே எல்லை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதும் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் கூட அப்படிக் கைது செய்யப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இரு தடவைகள் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்றுவரும் ஒரு நடவடிக்கைக்கு ஏன் அமைச்சரால் புதிய ஒரு உத்தரவு போடப்படுகிறது என்பது தான் இங்கு எழும் கேள்வி.

இந்த உத்தரவு வடபகுதி மீனவர்களின் அமைப்புக்களின் ஒன்றுகூடலின் போது விடுக்கப்பட்டுள்ளமையால், மீனவ அமைப்புக்களின் கோரிக்கையின் பேரிலேயே இந்திய மீனவர்கள் கைது இடம்பெறுகிறது என்ற ஒரு அபிப்பிராயம் எழ இடமுண்டு. இது தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நோக்கமும்கூட. அதாவது இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையே பகைமையையும், குரோத்தையும் ஏற்படுத்தும் நோக்குடனேயே அமைச்சர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். காலம் காலமாக இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதும், தாக்குவதும், மீன்பிடி உபகரணங்களை அழிப்பதும், கைது செய்வதும் இலங்கை மீனவர்களின் தூண்டுதலின் பேரிலேயே என ஒரு அபிப்பிராயத்தை உருவாக்குவதே அமைச்சரின் நோக்கமாகும்.

இது அடிப்படையில் எமது உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் வழங்கிவரும் ஆதரவை இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்ட அமைச்சரின் திட்டமிட்ட கருத்துவெளிப்பாடாகும்.

இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கிடையே கடல் எல்லைகள் தாண்டுவது தொடர்பாக கருத்துவேறுபாடுகளும், முரண்பாடுகளும் உண்டு. ஆனால் அவர்கள் எங்களின் தொப்புள் கொடி உறவுகள். சிங்கள மேலாதிக்க சக்திகளால் எமக்கு இன்னல்கள் விளைவிக்கப்படும் போது கொதித்து எழுபவர்கள். நாம் அகதிகளாக கடலேறிச் சென்ற போது அன்புக்கரம் நீட்டி ஆதரவு தந்தவர்கள். இன்றும் எமக்கு வலிமையான ஆதரவை வழங்கிவருபவர்கள். எனவே அவர்களுக்கும் எமக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் நட்புரீதியான முரண்பாடுகள். இவை நீண்ட கலந்துரையாடல்கள் மூலமும் ஒருவர் பிரச்சினையை மற்றவர் புரிந்துகொள்வதன் மூலமும் ஒரு புரிந்துணர்வு அடிப்படையிலான விட்டுக்கொடுப்புக்கள் மூலமும் தீர்க்கப்பட வேண்டிவை.

இந்த அடிப்படையிலான நட்புரீதியான சகோதரத்துவ முரண்பாட்டைப் பகை முரண்பாடாக மாற்றும் இலங்கை அரசின் சதி முயற்சியின் முகவராக செயற்படுகின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இலங்கையின் அரச ஒடுக்குமுறையாளர்களுக்கும் எமக்குமிடையேயுள்ளது பகை முரண்பாடு. இது போராட்டங்கள் மூலமும் அழுத்தங்கள் மூலமும் மட்டும்தான் தீர்க்கப்படக்கூடியது. ஆனால் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைப் பாவித்து இன அழிப்பை மேற்கொள்ளும் அரச மேலாதிக்க சக்திகளுடன் நல்லுறவைப் பேணும் அமைச்சர் ஈழத்து மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமிடையே பகையையும், வெறுப்பையும் வளர்க்கத் திட்டமிட்டுச் செயற்படுகின்றார். அதாவது பகை முரண்பாடுகளை மறைத்துவிட்டு நட்புரீதியான முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்ற முயற்சிக்கின்றார்.

இது அவரின் துரோகத்தனத்தின் வெளிப்பாடாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து மின்பிடிப்பதையோ, தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவிப்பதையோ கண்டிக்கவோ தடுத்துநிறுத்தவோ முயற்சிப்பதில்லை. கொக்கிளாய், நாயாறு ஆகிய பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறியக் குடியேற்றப்பட்டுள்ளனர்.

எமது கடல்வளம் அபகரிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மன்னாரில் சிங்களவர்கள் அட்டை பிடிக்க அனுமதிக்கப்படுவதும் எமது மீனவர்களுக்குப் படையினர் நெருக்கடி ஏற்படுத்துவதும் அவர் கண்ணில்படுவதில்லை. மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, சவுத்பார் ஆகிய இடங்களில் முஸ்லிம் மீனவர்கள் தொழில் செய்வர். கடற்படையினர் தடையாய் இருப்பதைப் பற்றி அவர் பொருட்படுத்துவதில்லை.

இப்படியான கொடுமைகளைத் தடுத்துநிறுத்த மனமில்லாத ஒரு அமைச்சர் இந்திய மீனவர்களையும், இலங்கை மீனவர்களையும் மோத வைக்கும் சதியில் இறங்கியுள்ளார்.

இது எமது உரிமைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் வழங்கிவரும் பேராதரவை மழுங்கடிக்க முயலும் ஒரு கேவலமான, நயவஞ்சகமான நடைமுறையாகும்.

ஆடு நனைவதற்காக அழும் ஓநாய் தொடர்பாக மக்கள் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையேல் ஓநாய் கூட்டத்திற்குப் பலியாகும் நிலையே ஏற்படும்.

– தமிழ்லீடருக்காக மாரீசன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*