இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக ஒரு செய்தி அண்மையில் ஊடகங்களில் உலாவியது. இதுகுறித்து விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று கொழும்பு வந்திருப்பதாகவும், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூட அந்தச் செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வருவது வழக்கமானது. புலிகள் அங்கு தாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இங்கு தாக்கப் போகிறார்கள் என்று பெரும்பாலும் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாவது வழக்கம்.
அவை பெரும்பாலும் ஊகங்களாகவே இருப்பதுண்டு. பரபரப்புக்காக ஊடகங்கள் இத்தகைய செய்திகளை வெளியிட்டதும் உண்டு. சில வேளைகளில் மக்களை எச்சரிக்கை செய்வதற்காக- புலனாய்வுப் பிரிவுகளே இதுபோன்ற செய்திகளை கசிய விட்டதும் உண்டு.
இப்படியான செய்திகள் வெளியாகிய பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றமை அபூர்வம் தான். விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டங்கள் துல்லியமாக அறியப்பட்டதாக இருப்பதில்லை என்பது அதற்குக் காரணம்.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. ஐ.எஸ் தீவிரவாதிகளே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி வெளியானதும், அதனை அமெரிக்கத் தூதரகம் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக, கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என்று பூடகமாகப் பதிலளிக்கப்பட்டது.
அதுபோலவே, பொலிஸ் பேச்சாளரும், விமானப்படைப் பேச்சாளரும், தமக்கு அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றே கூறியிருந்தனர்.
இவையெல்லாம் இந்தச் செய்தி உண்மையானது போன்ற தோற்றப்பாடு ஏற்படக் காரணமாகியது.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விசாரிக்க பொலிசாருக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஆக, ஒரு பாதுகாப்பு சார்ந்த- புலனாய்வு எச்சரிக்கை போன்று ஒரு செய்தி, எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் செய்தியின் பின்னணி வெறும் பரபரப்பை ஏற்படுத்துவது மாத்திரம் தானா? அல்லது இதற்குப் பின்னாலும் அரசியல் உள்நோக்கங்கள் உள்ளதா என்று அறியப்பட வேண்டியுள்ளது.
ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பலவீனப்படுத்தப்பட்டு வந்தாலும், உலகில் ஆங்காங்கே சில தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவிலும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தும் திட்டமும் அதற்கு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், இந்தியாவில் இதுவரையில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் செயற்பாடுகள் ஏதும் அறியப்படவில்லை.
இந்தநிலையில், விமானத்தைக் கடத்தி அமெரிக்கத் தூதரகத்தை தகர்ப்பது என்பது இலங்கையில் கடினமானதொரு காரியம். ஏனென்றால், மற்றைய நாடுகளை விட, இலங்கை தீவிரவாத எதிர்ப்பு செயற்பாடுகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தும் நாடு.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தீவிரவாத முறியடிப்பு உத்திகள் குறித்து மற்றைய நாடுகளுக்கு போதிக்கின்ற அளவுக்கு இலங்கைக்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறது.
அதுபோல இங்குள்ள பாதுகாப்புக் கட்டமைப்புகளும் வலுவானவை.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை குறிவைக்க ஐ.எஸ் அமைப்பு திட்டமிடுமா என்பது சந்தேகம் தான்.
ஆனாலும், இந்தச் செய்தியின் முக்கிய நோக்கம் அமெரிக்கத் தூதரகமாகத் தெரியவில்லை.
அண்மைக்காலமாக, இலங்கையில் அதிகரித்து வருகின்ற, வெறுப்புணர்வு பிரசாரத்தின் ஓர் அங்கமாகக் கூட இது இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளால், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுக் கருத்துக்கள் பரப்பப்பட்டும், முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டும் வந்தன. வெறுப்புணர்வு செயற்பாடுகள் முடிவுகட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அளவுக்கு நிலைமைகள் சென்றன.
இதையடுத்து, அரசாங்கம் கடும் நடவடிக்கையில் இறங்க நேரிட்டது. இதற்குப் பின்னர், தான் நிலைமைகள் சற்று கட்டுக்குள் வந்திருக்கின்றன.
ஐ.எஸ் தீவிரவாதத்தை முன்னிறுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகளை கட்டவிழ்த்து விடச் செய்யும் உத்தியாகவும் கூட, இதுபோன்ற வதந்திகள் செய்திகளாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடப்பது ஒன்றும் இரகசியமல்ல. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வெறுப்புணர்வு தாக்குதல்களே, அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அணிதிரளக் காரணமாயிற்று. அதனை ஒரு சதி என்றே மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
இப்போதும், அதுபோன்று தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்துவதற்கான திட்டமாகவும் இருக்கக் கூடும்.
ஒரு பக்கத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று சூளுரைக்கிறார். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தப் புள்ளியில் இருந்து பார்த்தால், தற்போது முன்னெடுக்கப்படும் வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவங்களின் பின்னால் ஓர் அரசியல் நோக்கம் இருப்பதற்கான நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்னமும் கூட, வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் ஆதரவு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணத்துக்கு, அண்மையில் பாகிஸ்தானுக்கு மஹிந்த ராஜபக் ஷ சென்றிருந்த போது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் றிஸ்வான் அக்தர், “மஹிந்த ராஜபக் ஷவுக்கு எந்த நேரத்திலும் உதவுவதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கும்” என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.
சீனாவின் பாதுகாப்புத் துறையினருக்கும் கூட மஹிந்த ராஜபக் ஷ வேண்டப்பட்டவராகத் தான் இருக்கிறார்.
வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் தமது தேவைக்கேற்ப, ஆட்சிமாற்றங்களை ஊக்குவிப்பது வழக்கம்.
மஹிந்த ராஜபக் ஷ கூட தன்னை மேற்குலக மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகளே தோற்கடித்ததாக முன்னர் கூறியிருந்தார்.
எனவே, ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்கு வைத்து அதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் சிக்க வைக்கும் நோக்கிலும் கூட, செய்திகள் பரப்பப்பட்டிருக்கலாம்.
அதைவிட கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் தனது கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதை, சீனா உள்ளிட்ட பலம்மிக்க நாடுகள் விரும்பாதிருக்கவும் கூடும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையை கிட்டத்தட்ட தனது மூலோபாய பாதுகாப்புக் கூட்டாளி என்ற அளவுக்கு கொண்டு செல்லும் நிலையை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
முன்னெப்போது இருந்ததையும் விட, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ரீதியாக வலுவான உறவுகள் ஏற்பட்டுள்ளன.
அண்மையில் வொசிங்டனில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய, தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக், ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இலங்கையுடன் மிகச் சிறப்பான இராணுவ உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
இலங்கை இராணுவத்துடனான உறவுகளை அமெரிக்கா மட்டுப்படுத்தியே வைத்திருந்தாலும், கடற்படை மற்றும் விமானப்படையுடன் அமெரிக்காவின் உறவுகளும், ஒத்துழைப்புகளும் மிகவும் விசாலமானவையாக மாறியிருக்கின்றன.
இது அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் வரிசையில் இலங்கையையும் இடம்பெறச் செய்துள்ளது. மூலோபாயக் கூட்டாளி என்ற அந்தஸ்துக் கூட இலங்கைக்குக் கிடைத்தால் ஆச்சரியமில்லை.
Mobility Guardian Exercise என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியை, வொசிங்டனுக்கு அருகேயுள்ள, Fairchild விமானப்படைத் தளத்தில் அமெரிக்க விமானப்படை இந்த மாதமும் அடுத்த மாதமும் நடத்தவுள்ளது.
இந்த பாரிய கூட்டுப் பயிற்சி வான்வழி மீட்பு, வான்வழியாகத் தரையிறங்கி விமான ஓடுபாதைகளை கைப்பற்றுதல், வானில் இருந்து தரைக்கு விநியோகங்களைப் பெறுதல் மற்றும் விமானங்களில் இருந்து விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட தந்திரோபாயங்களை கொண்டதாக இடம்பெறவுள்ளது.
Fairchild விமானப்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க வான் நகர்வு கட்டளையகத்தின் தளபதியான, ஜெனரல் கார்ல்டன் டேவே எவஹாட் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தக் கூட்டுப் பயிற்சி 25 இற்கும் மேற்பட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளாக, அமெரிக்க படை அதிகாரிகளால் பட்டியலிடப்பட்டுள்ள, பிரேசில், கொலம்பியா, பெல்ஜியம், தென்கொரியா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், ஜேர்மனி, இத்தாலி, சுவீடன், உக்ரேன், புர்கினோ பாசோ, மொரிட்டானியா, பங்களாதேஷ், நைஜீரியா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஜமைக்கா ஆகிய நாடுகளின் வரிசையில், இலங்கையும் அடங்கியுள்ளது.
இவ்வாறாக, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் உருவாகி வரும் பாதுகாப்பு நெருக்கத்தை விரும்பாத சக்திகள் கூட, இதுபோன்ற வீண் வதந்திகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்த முனைந்திருக்கலாம்.
ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை என்று பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, புலனாய்வு பிரிவினர், அரசாங்கம் என்று எல்லாத் தரப்பினரும் கூறினாலும், ஐஎஸ் தீவிரவாதம் குறித்த எச்சரிக்கைகள் அதையும் மீறி வந்து கொண்டிருக்கின்றன.
இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் அல்லது பாதுகாப்பு நலன்கள் அறியப்படாத வரையில், இதுபோன்ற ஊகச் செய்திகள் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டு தான் இருக்கும்.
– ஹரிகரன் –