sritharan

கண்துடைப்பு நடவடிக்கை (சமகாலப் பார்வை)

காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் பற்­றியும் அதற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்தும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை நோக்­கும்­போது, இந்த செய­ல­கத்­தினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. ஆட்கள் வலிந்து ஏன் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள்? அவர்­களை காணாமல் ஆக்­கி­ய­வர்கள் யார்? ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டதன் பின்­னணி என்ன என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை கிடைக்­கா­விட்டால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைப் பற்­றிய இந்த செய­ல­கத்தின் விசா­ர­ணை­க­ளினால் என்ன பயன் கிடைக்கப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

நிலை­மா­று­கால நீதிக்­கான பொறி­மு­றையின் நான்கு முக்­கிய அம்­சங்­களில் ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கின்ற காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்தை நிறுவும் சட்­ட­மூ­லத்தில் திருத்தம் செய்­யப்­பட்டு அது பாராளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு இடம்­பெற்ற விவா­தங்­ளின்­போது வெளிப்­பட்­டுள்ள தக­வல்­களின் அடிப்­ப­டையில், அந்தச் சட்டம் நியா­ய­மான முறையில் செயற்­ப­டத்­தக்க வல்­ல­மையைக் கொண்­டி­ருக்­குமா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

யுத்த மோதல்­க­ளின்­போது என்ன நடந்­தது என்ற உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­குதல், அத்­த­கை­ய­தொரு நிலைமை மீண்டும் இடம்­பெ­றாத வகையில் தடுத்தல் என்ற நான்கு தூண்­களைக் கொண்­டதே நிலை­மாறு கால நீதிப் பொறி­முறை ஆகும்.

இவற்றில் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான பொறி­மு­றை­யா­கவே காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கான சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போதிலும், அந்த சட்டம் இறுதி வடி­வத்­துடன் முற்றுப் பெற­வில்லை. அதனால் காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வு­மில்லை.

கிட்­டத்­தட்ட ஒரு வரு­டத்தின் பின்னர், அந்தச் சட்­ட­மூ­லத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்த மோதல்­க­ளின்­போது ஆட்கள் வகை­தொ­கை­யின்றி வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அவ­ச­ர­காலச் சட்­டமும் இறுக்­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அந்தக் காலப்­ப­கு­தியில் சந்­தே­கத்தின் பேரில் எண்­ணற்­ற­வர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். பெரும் எண்­ணிக்­கை­யானோர் திடீர் திடீ­ரென கடத்திச் செல்­லப்­பட்­டார்கள். இவர்­களில் ஒரு சிலரைத் தவிர ஏனை­யோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது வெளிச்­சத்­திற்கு வரவே இல்லை.

இதே­போன்று யுத்தம் முடி­வ­டைந்­த­போது, அர­சாங்­கத்தின் பாது­காப்பு மற்றும் பொது­மன்­னிப்பு உத்­த­ர­வா­தத்­தை­ய­டுத்து விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் பலர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் முள்­ளி­வாய்க்­காலின் எல்­லையில் வட்­டு­வாகல் இரா­ணுவ முகாம் அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைந்­தார்கள். அவர்­களில் கணி­ச­மா­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது இன்னும் தெரி­ய­வில்லை.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மட்­டு­மல்­லாமல், கடத்திச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கும், இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கும் ஆயுதப் படை­களும், இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­க­ளுமே பொறுப்பு என்­பது நிலை­நி­றுத்­தப்­பட்ட உண்­மை­யாக இருக்­கின்­றது.

ஏனெனில் விடு­த­லைப்­பு­லி­களின் ஊடு­ருவல் மற்றும் ஊடு­ருவல் தாக்­கு­தல்கள் என்­ப­வற்றைத் தடுப்­ப­தற்­கா­கவும், இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்­களில் அவர்­களின் உளவுச் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், மிகவும் இறுக்­க­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும், நடை­மு­றை­களும் இரா­ணு­வத்­தி­னரால் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தன. இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்­களில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­க­ளுக்குத் தெரி­யாமல் ஒரு துரும்­பு­கூட அசைய முடி­யாது – ஒரு துரும்­பைக்­கூட அசைக்க முடி­யாது என்ற நிலை­மையே காணப்­பட்­டது.

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தில் இருந்­த­வர்கள் இரா­ணு­வத்தின் முன் அனு­மதி பெற்ற நிலை­யி­லேயே வசிக்க முடிந்­தது. அதற்­காக அவர்கள் அனை­வ­ரையும் பற்­றிய தக­வல்­களை இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்கள் திரட்­டி­யி­ருந்­தார்கள். அவ்­வாறு திரட்­டப்­பட்ட தக­வல்கள் பெயர்ப்­பட்­டி­யல்­களின் அடிப்­ப­டையில் அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இரா­ணுவ அடை­யாள அட்­டைகள் அல்­லது இரா­ணுவ பாஸ் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

வெளிச் சக்­தி­க­ளுக்கு இடமே இல்லை

வெளியில் செல்லும் எவரும் முழத்­துக்­கொரு வீதிச் சோதனை முகாம் என்று வர்­ணிக்­கத்­தக்க வகையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த எண்­ணற்ற சோதனை நிலை­யங்­க­ளிலும், தடை­க­ளாகப் போடப்­பட்­டி­ருந்த இரா­ணுவ நிலை­க­ளிலும் முழு­மை­யாக சோத­னை­யி­டப்­பட்­டார்கள். முதலில் அவர்கள் தங்­க­ளு­டைய அடை­யா­ளத்தை நிரூ­பிப்­ப­தற்­காக இரா­ணு­வத்­தினர் வழங்­கி­யி­ருந்த அடை­யாள அட்­டைகள் அல்­லது இரா­ணுவ பாஸ் – அனு­ம­திப்­பத்­தி­ரத்தைக் காட்ட வேண்டும். அதனைப் பரி­சீ­லனை செய்த பின்னர், அவர்கள் உடல் பரி­சோ­த­னைக்கும், அவர்கள் கொண்டு செல்லும் பொருட்­களின் சோத­னையும் இடம்­பெறும்.

ஓரி­டத்தில் இருந்து இன்­னுமோர் இடத்­திற்குச் செல்­லும்­போது, ஒரே வீதியில் அடுக்­க­டுக்­காக அடுத்­த­டுத்து அமைக்­கப்­பட்­டி­ருந்த சோதனை நிலை­யங்கள் எல்­லா­வற்­றி­லுமே இவ்­வாறு முழு­மை­யான சோத­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அரை கிலோ மீற்றர் தொலைவில் உள்ள முதல் சோதனை நிலை­யத்தில் சோத­னை­யி­டப்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, அடுத்­த­டுத்த சோதனை நிலை­யங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் முழு­மை­யான சோத­னை­க­ளையே மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான் இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்­புக்கள், அடிக்­கடி இடம்­பெ­று­கின்ற சோதனை நட­வ­டிக்­கைகள், என்­ப­வற்றில் ஆட்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். சந்­தே­கத்தின் பேரில் விசா­ர­ணைக்­காக அழைத்துச் செல்­லப்­பட்­டார்கள். அதே­நே­ரத்தில் ஆட்­க­டத்தல் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

இறுக்­க­மான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த இத்­த­கைய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரைத் தவிர வேறு எந்­த­வொரு வெளிச் சக்­தி­களும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்குத் தெரி­யாமல் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்­களில் பிர­வே­சிக்க முடி­யாத நிலைமை நீடித்­தி­ருந்­தது. அத்­த­கைய வெளிச்­சக்­திகள் வரு­வ­தாக இருந்தால், புல­னாய்­வா­ளர்­களின் அனு­மதி பெற்­றி­ருக்க வேண்டும். அல்­லது அவர்­களின் ஆத­ரவு அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இத­னால்தான் இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­களில் கைது செய்­யப்­பட்டும், கடத்­தப்­பட்டும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இரா­ணு­வமே பொறுப்பு என்று கூறப்­ப­டு­கின்­றது. இதனை அர­சாங்கம் எந்த வகை­யிலும் மறுக்க முடி­யாது என்றும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

பல காரி­யங்­களை இரா­ணு­வத்­தி­னரே மேற்­கொண்­டனர். அதே­நேரம் ஆயுதக் குழுக்­களைச் சேர்ந்­த­வர்­களும் இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்­ததும் உண்டு. ஆயினும், அவர்கள் தன்­னிச்­சை­யாகச் செயற்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இரா­ணு­வத்­தி­னரால் குறித்து ஒதுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் அவர்­களின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமை­வா­கவே அவர்கள் ஈடு­பட்­டி­ருந்­தனர். ஆகவே, இரா­ணு­வத்­தினர் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­யி­னும்­சரி, அவர்­களின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமை­வாக இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளா­யி­னும்­சரி, அவை எல்­லா­வற்­றுக்கும் இரா­ணு­வமே பொறுப்­பாக இருந்­தது என்­பதே அன்­றைய யதார்த்­த­மாக இருந்­தது.

காணாமல் போனோரைத் தேடிப்­பார்ப்­பதே பிர­தான நோக்கம்

இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தைப் போலவே, விடு­த­லைப்­பு­லி­களும் தமது கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சத்தைத் தமது பூரண கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தனர். அந்த வகையில் அங்கு அவர்­களை அறி­யாமல் எந்­த­வொரு சம்­ப­வமும் இடம்­பெற முடி­யாத சூழலே அப்­போது நில­வி­யது. ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கையில் அவர்­களால் பிடித்துச் செல்­லப்­பட்­டதன் பின்னர் அல்­லது அழைத்துச் செல்­லப்­பட்­டதன் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு அவர்­களே பொறுப்­பா­ளிக­ளாவர்.

இறுதிச் சண்­டை­யின்­போது விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத ரீதி­யாக முற்­றாக அழிக்­கப்­பட்­டு­விட்­டார்கள். அதனால், அவர்­களால் பிடித்துச் செல்­லப்­பட்டு காணாமல் போன­வர்கள் குறித்து அவர்­க­ளிடம் பொறுப்பு கேட்க முடி­யாத ஒரு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆயினும் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பிடித்துச் செல்­லப்­பட்ட பலர் யுத்­தத்தில் இரா­ணுவம் வெற்­றி­ய­டைந்­ததன் பின்னர், இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்­திற்குள் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதற்கு கண்­கண்ட சாட்­சியம் உட்­பட பல சாட்­சி­யங்கள் இருப்­ப­தாக, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே உண்மை நிலைமை என்ன என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக, காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான செய­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கான சட்டம், பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் எங்கே வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள், எங்கு இருக்­கின்­றார்கள் என்­பதைத் தேடிப் பார்ப்­பதே காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்தின் முக்­கிய நோக்­க­மாகும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விவா­தத்­தின்­போது பாராளு­மன்­றத்தில் உரையாற்றுகையில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைத் தேடிப்­பார்ப்­ப­தை­விட அந்த செய­ல­கத்­திற்கு வேறு எந்த அதி­கா­ரமும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. எவர் மீதும் அந்த செய­லகம் வழக்கு தொட­ரவும் மாட்­டாது, அதற்கான அதி­கா­ரமும் அதற்குக் கிடை­யாது என அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள எவ­ரா­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், அவர் எவ்­வாறு காணாமல் ஆக்­கப்­பட்டார், யாரால் காணாமல் ஆக்­கப்­பட்டார் ஆகிய தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­மாட்­டாது, அவை இர­க­சி­ய­மா­கவே வைக்­கப்­படும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

நாட்டில் தற்­போது நடை­மு­றையில் உள்ள தகவல் அறியும் சட்­டத்தின் மூலம் பெறப்­பட்­டுள்ள தகவல் அறியும் உரி­மையின் அடிப்­ப­டை­யில்­கூட, இந்தத் தக­வல்கள் அல்­லது விப­ரங்­களை அறிய முடி­யாது. அது மட்­டு­மல்­லாமல் நீதி­மன்­றத்­தில்­கூட இந்தத் தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­ட­மாட்­டாது. காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்­தினால் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்ற தக­வல்கள் மிகவும் இர­க­சி­ய­மாகப் பேணப்­படும். எவ­ருக்கும் அவை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

மற்­று­மொரு முக்­கி­ய­மான விட­யமும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. காணாமல் போயுள்ள ஒரு­வரைக் கண்­டு­பி­டித்­ததன் பின்னர், அவர் தான் உயி­ரோடு இருப்­ப­தாக, தனது உற­வி­னர்­க­ளுக்குக் கூற வேண்டாம் என கூறினால், அந்த தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது, அவ்வாறு வெளிப்படுத்துவதற்கான அதி­கா­ரமும் காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்­திற்குக் கிடை­யாது என்று இந்தச் செய­ல­கத்­திற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்த தக­வல்­களை வெளி­யி­டு­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.

தேடு­வதா, புல­னாய்வு விசா­ரணை செய்­வதா?

காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் பற்­றியும் அதற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்தும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை நோக்­கும்­போது, இந்த செய­ல­கத்­தினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது.

ஆட்கள் வலிந்து ஏன் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள்? அவர்­களை காணாமல் ஆக்­கி­ய­வர்கள் யார்? ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டதன் பின்­னணி என்ன என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை கிடைக்­கா­விட்டால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைப் பற்­றிய இந்த செய­ல­கத்தின் விசா­ர­ணை­க­ளினால் என்ன பயன் கிடைக்கப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைத் ‘தேடிப்­பார்ப்­பதே’ காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான செய­ல­கத்தின் பிர­தான நோக்கம் என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட ஒரு­வரைத் தேடிப்­பார்ப்­பதன் மூலம் மட்டும் அவரைக் கண்டு பிடிக்க முடி­யுமா என்­பது சந்­தே­கமே. ஏனெனில் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வுடன் தேடிப்­பார்க்­கலாம். தேடிக் கண்டுபிடிக்­கலாம்.

ஆனால், இலங்­கையில் 1994 ஆம் ஆண்டு முதல் முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற இறுதி யுத்தம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 65 ஆயிரம் பேர் காணாமல் போயி­ருப்­ப­தாகக் கணக்­கி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இறுதி யுத்த மோதல்­க­ளின்­போது, இரு­பத்து நாலா­யி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் காணாமல் போயி­ருப்­ப­தாக பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. எனவே பல வரு­டங்­களின் முன்னர் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு, ‘தேடிப்­பார்ப்­பதன்’ மூலம் உண்­மை­யான விப­ரங்­க­ளையும் தக­வல்­க­ளையும் பெற்­று­விட முடி­யாது. அதற்கு சட்ட வலு­வுள்ள புலன் விசா­ரணை ரீதி­யி­லான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். அதன் மூலம்தான் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் எவ்­வாறு காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கண்­ட­றிய முடியும்.

ஆனால், அதற்­கு­ரிய சட்ட வலுவும், சட்­ட­ரீ­தி­யான அதி­கா­ரமும், காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்­திற்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை பிர­தமர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஆட்­களைக் கடத்­து­வது என்­பதே மிக­மோ­ச­மான குற்றச் செய­லாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்று சட்டம் கூறு­கின்­றது. சாதா­ரண குற்றச் செயல்­களில் இடம்­பெ­று­கின்ற ஆட்­க­டத்­தல்­க­ளுக்கே நீதி­மன்­றங்கள் கடு­மை­யான தண்­ட­னை­களை தீர்ப்­புக்­களின் மூலம் வழங்­கி­யி­ருக்­கின்­றன.

ஆனால், ஆட்­களைக் காணாமல் ஆக்­கு­வது என்­பது ஒரு குற்றச் செய­லாக இது­வ­ரையில் இலங்­கையில் சட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை. ஆட்­களைக் காணாமல் ஆக்­கு­வது பற்­றிய எந்­த­வி­த­மான குறிப்பும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பது, ஐ.நா. அமைப்­புக்­க­ளினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

காணாமல் போனோரைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான செய­ல­கத்தை உரு­வாக்­கி­யதன் பின்பே, ஆட்­களைக் காணாமல் ஆக்­கு­வதை ஒரு குற்­றச்­செ­ய­லாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய சட்டம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஏற்­க­னவே ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட குற்றம் பெரிய அளவில் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனை ஒரு குற்றச் செய­லாகப் பிர­க­ட­னப்­ப­டுத்தி, அத­னுடன் இணைந்­த­தா­கவே காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கத்தை உரு­வாக்கும் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதன் ஊடா­கத்தான் அந்த குற்­றத்தை இழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியும் நியா­யமும், நிவா­ர­ணமும் கிடைப்­ப­தற்கு வழி­யேற்­படும்.

தண்­ட­னையில் இருந்து தப்­பு­வதை ஊக்­கு­விப்­பதோ…..?

காணாமல் போனோரைத் தேடிப்­பார்ப்­ப­தற்­கான செயல­கத்தை வேறா­கவும், ஆட்­களைக் காணாமல் ஆக்­கு­வதை ஒரு குற்­றச்­செ­ய­லாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதை வேறா­கவும் இரண்டு வேறு வேறு சட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தச் சட்­டங்கள் இண்டும் ஒன்­றுக்­கொன்று பின்னிப் பிணைந்த வகை­யி­லான சட்ட சரத்­துக்கள் உள்­ள­டக்­கப்­ப­டா­விட்டால், இவை, குற்­றங்­களைப் புரிந்­து­விட்டு, குற்­ற­வா­ளிகள், தண்­டனை பெறு­வதில் இருந்து தப்பிச் செல்­கின்ற போக்கை ஊக்­கு­விப்­ப­தற்கே வழி­வ­குக்கும் என்­பது சட்­டத்­துறை நிபு­ணர்­களின் கருத்­தாகும்.

நாட்டின் அர­சியல் மற்றும் இரா­ணுவ செயற்­பா­டு­களில் குற்­றங்­களைப் புரிந்­து­விட்டு தண்­ட­னை­களில் இருந்து தப்பிச் செல்­கின்ற போக்கு நீண்­ட­கா­ல­மா­கவே நிலவி வரு­கின்­றது. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலைநாட்டும் பணியில் ஈடு­ப­டு­ப­வர்­களே தண்­ட­னையில் இருந்து தப்­பு­கின்ற கலா­சா­ரத்தின் மூலம் காப்­பாற்­றப்­பட்டு வரு­கின்­றார்கள் என்ற சர்­வ­தேச மட்டத்­தி­லான குற்­றச்­சாட்டும் நீண்ட கால­மா­கவே இருந்து வரு­கின்­றது.

மோச­மான ஒரு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த போதிலும், மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களைப் பேணு­வதில் உள்ள அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறுப்பு கூறும் செயற்­பாட்டை முன்­னைய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கவே இல்லை.

சர்­வா­தி­காரப் போக்கில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருந்த அந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பிவிட்டு, ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தா­கவே உறு­தி­பூண்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், இந்த அரசாங்கமும்கூட, பாரதூரமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக் கொள்ளும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் போக்கிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளுக்கு அமைவாக, பொறுப்புக் கூறும் செயற்பாடுகளை முன்னெடுக்க முனைந்திருக்கின்றதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது.

காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாகிய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது ஐ.நா. மனித உரிமை அமைப்புக்களின் வலியுறுத்தலாகும். அந்த வலியுறுத்தலை கவனத்தில் கொள்வதாக உறுதியளித்த அரசு அவர்களைப் புறந்தள்ளிய வகையிலேயே செயற்பட்டு வருகின்றது.

தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும். இது நியாயமான கோரிக்கை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஆனால், அத்தகைய ஒரு விசாரணை நடத்தப்படமாட்டாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, இராணுவத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என்பது பொதுவான நிலைப்பாடாகும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயலகத்தின் நடவடிக்கைகளில் எந்தவொரு இராணுவத்திற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது. அவர்கள் எவரும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் நிலைமாறுகால நீதிக்கான செயற்பாட்டில் ஒரு முக்கிய தூணாகிய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணையானது வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே கருதத் தோன்றுகின்றது. எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் மிகுந்த உறவினர்களுடைய எதிர்பார்ப்பை எந்த வகையில் அரசாங்கம் நிறைவேற்றப் போகின்றது என்பது தெரியவில்லை.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*