vp08

வலிசுமந்த பதிவுகள்- 08 (சோகம்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுவதோடு வித்துடல்கள் கிடைக்கப் பெறாதவர்களின் நினைவாக நினைவுக்கற்கள் நாட்டப்பட்டு புனிதமான வணக்கத்திற்குரிய இடங்களாக மாவீரர் துயிலும் இல்லங்களே விளங்கியது.

தாயகத்தில் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட தமிழீழத்தாயகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்றிருந்தன. 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் சிங்களப்பேரினவாதப்படைகளுடன் மீண்டும் நான்காவது கட்ட ஈழப்போர் மூண்டபின்னர் குறுகிய காலத்திலேயே கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்றிருந்த மாவீரர்துயிலும் இல்லங்கள் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியது.

யாழ்hழ்குடாநாட்டிலும் வவுனியாவிலும் 2005-ம்ஆண்டு பிற்பகுதியில் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் வெளியேறியதையடுத்து அந்தத் துயிலுமில்லங்களின் செயற்பாடுகளும் நின்றுபோனது.

அதையடுத்து 2007-ம் 2008-ம்ஆண்டுகளில் போர்க்கள நடவடிக்கைகள் வன்னிப் பெருநிலப்பரப்பை மையம் கொண்டிருந்ததால் வீரச்சாவடைகின்ற மாவீரர்களின் வித்துடல்கள் வன்னிப்பகுதியில் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களிலேயே விதைக்கப்பட்டன.

குறிப்பாக 2008-ம்ஆண்டுகாலப்பகுதியில் வன்னியில் போர் உக்கிரமடைந்த வேளையில் வன்னியில் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இராணுவத்தினாரின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியது.

இறுதியாக 2008-ம்ஆண்டு டிசெம்பர் மாதம் மற்றும் 2009-ம்ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் மாத்திரம்தான் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் இருந்தது. 2009-ம் ஆண்டு ஜனவரிமாதம் 20-ம் திகதிக்குப் பிற்பாடு தர்மபுரத்தையும் தாண்டி சுண்டிக்குளம் சந்திவரையிலும் படையினர் ஆக்கிரமித்திருந்தனர்.

அங்கு நிலைகொண்டிருந்த படையினர் விசுவமடு தேராவில் பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். விசுவமடுப் பிரதேசத்தில் தேராவில் என்ற இடத்திலேயே குறித்த விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அச்சமான சூழ்நிலையிலும் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தது. சுண்டிக்குளம் சந்தியில் நிலை கொண்டிருந்த அரசபடையினர் எந்த நேரத்திலும் தேராவிலை நோக்கியதாக முன்னேறக்கூடிய அபாய சூழ்நிலை நிலவியதாலும் துயிலுமில்லத்தைச் சூழவுள்ள பகுதிகளில் தொடராக எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாலும் பாதுகாப்பான வேறோர் இடத்தில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பதற்கான துயிலுமில்லத்தை ஏற்பாடு செய்யவேண்டிய அவசரத்தேவை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது.

இதற்கமைவாக இரணைப்பாலையில் பெருந்தோட்டப் பகுதியினரின் ஆளுகையிலிருந்த தென்னங்காணி மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பதற்கான துயிலுமில்லமாக நிர்ணயிக்கப்பட்டது. இதேநேரத்தில் தேவிபுரத்தில் “ஆ”பகுதிக் குடியேற்த் திட்டம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் மற்றுமோர் துயிலுமில்லத்திற்கான இடம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே அரச படையினரின் முன்னேற்ற நடவடிக்கை காரணமாக விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதையடுத்து விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தையும் படையினர் ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இதன்பின்னர் இரணைப் பாலையிலும் தேவிபுரத்திலும் துயிலுமில்லத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன. அகவணக்கமும் உறுதிஉரையும் அதனைத் தொடர்ந்து மரியாதை வேடடொலிகளும் தீர்க்கப்பட்டதோடு வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

விசுவமடு துயிலுமில்லம்மலர் வணக்கம் இடம்பெறவில்லை. பெற்றோர்களால் மலர்மாலையும் அணிவிக்கப்படவில்லை. வித்துடல்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருந்ததால் மலர்வணக்கத்திற்கான பூக்கள் ஏற்பாடு செய்யக்கூடிய சூழ்நிலை அப்போது இருக்கவில்லை.

சிலநாட்களிலேயே இருட்டுமடுக் காட்டுப்பகுதிவழியாக படையினர் முன்னேற்றநடவடிக்கையை மேற்கொண்டு உடையார் கட்டுப்பகுதியையும் ஆக்கிரமித்துக்கொண்டனர். அத்தோடு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதிகளுக்கு ஊடாகவும் படையினர் அமைதியான ஊடுருவல்நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தப்பகுதிகளில் நிலைகொண்டுவிட்டு தொடரான எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டதால் சிலநாட்களிலேயே தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் வித்துடல் விதைப்புச் செயற்பாடுகளை நிறுத்தி அந்தஇடம் கைவிடப்பட்டது.

தொடர்ந்தும் இரணைப்பாலை பெருந்தோட்டப்பகுதி மாவீரர் துயிலுமில்லத்தில் படையினரின் எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் ஒருமாதத்திற்கும் மேலாக மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்தக்காலப்பகுதியில் மாவீரர்களின் வித்துடல்கள் சுத்தம் செய்யும் இடமான தியாகசீலம் தேவிபுரத்தில் “ஆ”பகுதிக்குடியேற்றத்திட்டத்திற்கு சற்றுத்தொலைவில் மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. இங்கு தண்ணீர் உள்ளிட்ட வித்துடல்களை சுத்தம்செய்வதற்கான எந்தவிதமான அடிப்படைவசதிகளும் இருக்கவில்லை. ஒரு பங்கரும் ஒரு தகரக்கொட்டிலும் மாத்திரமே அமைக்கப்பட்டிருந்தது.

பங்கருக்குள் வோக்கியில் தொலைத்தொடர்புச் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேலும் வித்துடல்கள் பழுதடையாமல் பாதுகாப்பதற்கான மருந்து வசதிகளும் இருக்கவில்லை. போர்க்களங்களிலிருந்து கொண்டுவரப்படும் வித்துடல்களுக்கு காயங்களுக்கு ஏற்கனவே குருதித் தடுப்புப்பஞ்சணை வைத்துக்கட்டப்பட்டிருக்கும். இதன்பின்னர் தியாகசீலத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மேலும் குருதி கசியாதவாறு கட்டுப்போடப்பட்டு சீருடைகள்அணிவிக்கப்பட்டு பேழையில் (பெட்டியில்) வைக்கப்பட்டு துயிலுமில்லத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

போர்க்களங்களில் வீரச்சாவடைகின்ற மாவீரர்களின் வீரச்சாவுச் செய்தியை பெற்றோர் உரித்துடையோருக்கு அறிவிப்பதிலும் பெரும் சிக்கல்கள் இருந்ததன. போராளிகள் தமது சுயவிபரக்கோவையில் பதிவுசெய்திருந்த முகவரியில் அவர்களது பெற்றோர்களும் உரித்துடையோரும் வசிக்கவில்லை.

அவர்கள் இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்தனர். இன்னும் பல மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்கள் கடல்வழியாக யாழ்ப்பாணம் திருகோணமலை வவுனியா போன்ற அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

ஆகவேதான் மாவீரர்களின் வீரச்சாவுச் செய்தி புலிகளின்குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டு இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் பெற்றோர் உரித்துடையோர்கள் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் பகுதிகளில் அமைந்திருந்த அரசியல்த்துறைச் செயலகங்களிலோ அல்லது இரணைப்பாலையில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லத்திலோ தொடர்புகொள்ளவேண்டும்.

அவ்வாறு தொடர்புகொண்டவர்கள் அரசியல்த்துறையினரின் ஏற்பாட்டில் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்திற்கு கூட்டிவரப்பட்டு அவர்களின் முன்னிலையில் மாவீரர்களின் இறுதிவணக்கநிகழ்வு இடம்பெற்றது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் வித்துடல்கள் மாவீரர் பணிமனையினரின் ஏற்பாட்டிலேயே மாவீரர்களின் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புக்களுடன் விதைகுழியில் விதைக்கப்பட்டதன.

அவ்வாறு வித்துடல் விதைக்கப்பட்ட பிற்பாடு யாராவது அவர்களின் பெற்றோர் உரித்துடையோர் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் அரசியல் துறையினரால் துயிலுமில்லத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டு குறித்த மாவீரர்கள் விதைக்கப்பட்ட விதைகுழிகளுக்கு அவர்கள் வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டன. இந்த நடைமுறை வன்னியில் போர் மிக மோசமாக உக்கிரமடைந்த நாளான 2009-ம்ஆண்டு மேமாதம் 10-ம் திகதி வரையிலும் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது.

2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியோடு இரணைப்பாலையையும் படையினர் ஆக்கிரமித்துவிட இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லமும் கைவிடப்பட்டு வலைஞர்மடத்திற்கு தெற்குப் புறமாகவுள்ள களித்தரை வெளிப்பகுதியை மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கும் துயிலுமில்லமாக நிர்ணயிக்கப்பட்டு அங்கு வித்துடல்கள் விதைக்கப்பட்டது.

இங்கு வித்துடல்கள் விதைக்க தொடங்கி ஒரு வாரம் கடந்து அதாவது நான் முன்னர் குறிப்பிட்டது போல மார்ச் மாதம் முதலாவது வாரத்திலேயே பருவகாலம் தப்பிய மழை தொடர்ந்து மூன்றுநாட்கள் பெய்ததால் வித்துடல்கள் விதைக்கப்பட்ட களித்தரையெங்கும் வெள்ளக்காடாகியது.

இதையடுத்து உடனடியாக வேறோரிடத்தில் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாடு செய்ய வேண்டியதேவை மாவீரர் பணிமனையினருக்கு ஏற்பட்டது. அதையடுத்து இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு சமீபமாகவுள்ள வெளிப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

ஏப்ரல் மாதம் 20-ம் திகதிக்குப் பிற்பாடு குறித்த இடம் படையினரின் மோசமான எறிகணைகள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்களுக்கு இலக்கானதால் அந்த துயிலுமில்லமும் கைவிடப்பட்டது. அதையடுத்து வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் கப்பல் வீதிக்கு அண்மையில் (ஜோர்தான்நாட்டுஅரிசிக்கப்பல் தரைதட்டியபகுதி) இடம் தேர்வுசெய்யப்பட்டு மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டது.

இங்கு 2009-ம்ஆண்டு மேமாதம் 12-ம்திகதி வரையிலும் வித்துடல் விதைப்பு செயற்பாடுகள் நடைபெற்றன. 12-ம்திகதி இரவுதான் குறித்த இந்தக் கப்பல் வீதி வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர்.

இதையடுத்து வந்த நாட்களான 13-ம் 14-ம் 15-ம் திகதிகளில் யுத்தத்தின் தீவிரத்தன்மை மிக மோமாக நிலவியதாலும் வித்துடல்கள் விதைப்பதற்கான தனித்துவமான இடவசதிகள் இல்லாமையாலும் அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறும் வசதிக்கேற்றவாறும் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

ஆனாலும் 16-ம் 17-ம் திகதிகளிலும் மற்றும் படையினர் முள்ளிவாய்காலை முழுமையாக ஆக்கிரமித்து ஆயுதப்போர் முடிவுற்ற நாளான 18-ம்திகதி வரையும் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படவேயில்லை. அவை அந்தந்த இடங்களிலேயே விடுபட்டதன.

வலைஞர்மடம் களித்தரையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட நாட்களில் தியாகசீலத்தில் வித்துடல் வைக்கும் பேழைகள் (பெட்டிகள்) ஐம்பது மாத்திரமே கைவசமிருந்ததன. எனவே அந்த நாட்களிலிருந்து இறுதி நாட்கள் வரையிலும் மாவீரர்களின் வித்துடல்களுக்கு இறுதிவணக்கம் செலுத்தப்பட்டு வித்துடல் விதைகுழியில் விதைக்கப்படுகின்ற தருணத்தில் பேழையிலிருந்து வித்துடல் எடுக்கப்பட்டுத்தான் விதைகுழியில் விதைக்கப்பட்டது.

தாயகவிடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரச் செல்வங்களின் விதை குழிகளையும் நினைவுக்கற்களையும் இன்று சிங்களப்பேரினவாதப்படைகள் கனரக வாகனம் கொண்டு கிளறி அந்த நினைவுச் சின்னங்களை அடையாளம் தெரியாமல் அழித்துவிட்டார்கள். சிங்களப் பேரினவாதப் படைகள் நிகழ்த்திய இந்த இழிவான கீழ்த்தரமான செயல் தமிழ்மக்களின் இதயங்களில் ஆறாதரணமாக வலித்துக்கொண்டிருக்கின்றன.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*