IMG-efc7417154c9c24247ef42b4a8e625a7-V

தமிழ் எம்.பி.க்கள் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டத்திலீடுபட ஒன்று திரள வேண்டும் – ஜனநாயகப் போராளிகள் கட்சி

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்து, அனுராதபுரத்தில் ஒன்று கூடி, அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி கோரியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒரு நாள் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதையொட்டி, அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவின் சார்பில் துளசியினால் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தரப்பில்  பல தசாப்தகாலங்ளாக புரையோடிப்போய் இருக்கின்ற அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் மிகக்காத்திரமானதும் ஏற்புடையதுமான அரசியல் அழுத்தத்தை பிரயோகிக்கும் அவசரமானதொரு நிலை தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் உரிமைசார் போராட்டங்களில் இதுவரை அர்ப்பணிக்கப்பட்ட தியாகங்களில் சற்றேனும் குறையில்லாத தியாகங்களுக்கு உரித்துடையவர்கள் சிங்களச் சிறைகளில் பல ஆண்டுகளாக சிறையிருப்பவர்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் சட்ட வியாக்கியானங்களை கேட்டிருக்கின்றோம். இவை எவையும் அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பான நியாயப்பாடுகளுக்கு  வலுச்சேர்க்கவில்லை. மாறாக தமிழர் தரப்பால் கைதிகளின் விடுதலை தொடர்பில் செய்த எல்லா போராட்டங்களையும் உதாசீனம் செய்ததன் மூலம் ஒரு கால இழுத்தடிப்பை சிங்கள அரசுகள் தொடர்ந்து செய்துவருகின்றது.

இடர்ப்பாடுகள் நிறைந்த இந்த காலத்தில் அரசியல் கைதிகளின் ஊசலாடும் உயிர்கள் மீது கரிசனையும் தமிழர்களின் உரிமைபோராட்டத்தில் உண்மையான அக்கறையும் இருப்பின் தமிழர் நிலப்பரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருக்கும் அனுராதபுரநகரில் ஒன்றுகூடி, முகாமிட்டு, தரித்திருந்து, கைதிகளின் ஊசலாடும் உயிர்களைவிட சிறிலங்காவின் பாராளுமன்ற ஜனநாயகம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை சர்வதேசத்திற்கும் சிறிலங்காவின் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூறவேண்டிய கடப்பாடு தமிழர் பிரதிநிதிகளுக்கு உண்டென்பதை நாங்களும் மக்களும் திடமாக நம்புகிறோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது காக்கப்பட்ட மௌனத்தைப்போன்று  அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்திலும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர் அனைவரும் அமைதி காப்பீர்களாயின் தமிழர் உரிமைகள் மற்றும் அபிலாசைகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியை கேள்விக்குட்படுத்தப்படும் நிலை தமிழ் மக்களுக்கு உருவாகும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*