03

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும்

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலானது உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளதாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது அரச தலைவர்களின் சந்திப்பில் நேற்று  பிற்பகல் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களால் வலய பொருளாதார திட்டங்கள் சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அத்துடன் அதிகரித்து வருகின்ற வறுமை காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும், அச் சவால்களை தீர்ப்பதற்கு வலய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

வங்களா விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பிம்ஸ்டெக் மாநாட்டின், நான்காவது அரச தலைவர்கள் சந்திப்பு “சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் நேற்று தலைநகர் கத்மண்டுவில் நோபாள பிரதமரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய  நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*