gotha

பாரிய ஊழல் மோசடிகள் – கோத்தபாய மீது மற்றொரு வழக்கு!

நிதி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோத்தபாய உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வழக்கின் விசாரணைக்காக கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேரிடம் கடந்த ஜூன் மாதம் நிதிமோசடி விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதென தெரிவித்து, நல்லாட்சி அரசாங்கம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வழக்குகளை துரிதப்படுத்தும் வகையில் கடந்த வாரம் விசேட நீதிமன்றம் திறந்துவைக்கப்பட்டது. அதன் முதலாவது வழக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அலுவலக தலைமை அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜபக்ஷ அருங்காட்சியம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபரால் விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*