ajith-720x450

கூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு!

 எதிர்க்கட்சியின் கடமைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பியும்  சரியாக மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று தமது நிலையிலிருந்து கீழே சென்று விட்டனர். அவர்களுக்கு பலம் இருக்குமாகா இருந்தால் அவர்கள் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ தான் இலக்கு வைக்க வேண்டும்.

அதனைவிடுத்து, எதிர்க்கட்சித் தலைமைப் பதவிக்கு அவர்கள் இவ்வாறு போராடுவதானது அவர்களின் நிலைமையையே உணர்த்துகிறது. அவர்களின் அரசியல் பலம் குன்றியுள்ளது என்பதே உண்மையாகும்.
அந்த அணியை பலப்படுத்திக்கொள்ள அதன் உறுப்பினர்களால் தற்போது முடியாதுபோயுள்ளது. அவர்கள் எதிர்கட்சி அந்தஸ்த்தை கோரினாலும் தலைமைப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்த முரண்பாடுகளும் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சி அந்தஸ்த்து வேண்டுமாயின் நாடாளுமன்த்தில் சுயாதீன அணியாக இவர்கள் மாற வேண்டும்.

ஆனால், இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்புரிமையையும் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அவர்கள் இழக்க நேரிடும். இவ்வாறு சுயாதீனமாக இயங்க ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வரவேண்டும்.

அத்தோடு, எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை பெறுவதற்கு முன்னர் ஒன்றிணைந்த எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியை தம்வசப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகியோர் எதிர்க்கட்சியின் கடமைகளை முறையாகவே செய்து வருகிறார்கள். ஆதரவு வழங்க வேண்டியவற்றுக்கு ஆதரவினையும் எதிர்ப்பதற்கு எதிர்ப்பினையுமே அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் இந்த முரண்பாடுக்குள் அரசாங்கத்தின் தலையீடு அவசியமற்றதாகும் என்பதே எமது கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*