sarlin

கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடம்; தொடரும் விசாரணைக்கெடுபிடி!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.

இது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் காலை அனைவரது வீட்டுக்கும் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு துண்டுகளை அனைவரிடமும் கையளித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மானிப்பாய், யாழ்ப்பாண பொலிசார், மற்றும் கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும் பல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்தும் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இறுதியாக யாழ்ப்பாண பொலிசாரால் இந்து இளைஞர் மன்றம் மற்றும் நிர்வாக சபையின் தலைவர் செயலார் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு,

இவ்வாறான சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு விசாரணைகளை முடிவுறுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீளவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளமை மத வழிபாட்டுக்கு இடையூறு செலுத்தும் நடவடிக்கையாகும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்காக ஆலய உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக 22 ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், இவ்வாறன சம்பங்களை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கைகளை மீளவும் அரசு திட்டமிட்ட வகையில் களமிறங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*