mul

விளக்கேற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் முல்லைத்தீவு?!

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே பலர் பயன்படுத்துவதாகவும், எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. வடமாகாண ஆளுநருக்கும், முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய போதே அந்த ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்ற போதும் தமிழ் அரசியல் காற்புணர்ச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின் போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை எனவும், தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக தம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நகரில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதும் அதில் வைத்தியர்கள் வருவதில்லை பல கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இரண்டு பேருந்துகளை பெற்று எமது மக்கள் தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். அது மிகவும் வேதனைக்கு உரியது. ஒரு மனிதன் வாழ்வதற்கு மருத்துவம் இன்றியமையாதது. எனவே முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முன்னர் இருந்ததுபோல் வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பெற ஆளுநர் மத்திய அரசாங்கம் ஊடாக ஆவணம் செய்ய வேண்டும்.

வட்டுவால் பாலம் பாரியளவில் பழுதடைந்துள்ளது. அதனை உடனடியாக திருத்தி அமைத்து மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமுலாக்கப்பட்டு புதிதாக அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இறுதி யுத்தத்தில் பாரிய அழிவினை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் யுத்தத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அந்த மக்களின் அபிவிருத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி என்பன எமது நாட்டில் இன்றைய கட்டாய தேவையாக இருக்கின்றது என முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஆளுனர், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வடக்கு அபிவிருத்தி செயலணியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நான் உறுப்பினராக இருப்பதன் காரணமாக முல்லைத்தீவு ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன்.

அத்துடன், ஏற்கனவே செயலணியின் செயலாளர் சிவஞானசோதி முல்லைத்தீவு வீதிகள் பாலங்கள் பலவற்றினை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார். அதற்கு மேலதிகமாக தங்களின் சர்வதேச விளையாட்டு மைதானம், மீன்பிடித்துறை பீடம் என்பனவற்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பில், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகளான எம்.டி.விக்டர், எஸ்.ராஜேஸ்வரன், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அன்டனி குறூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*