breaking news_1521898157229.jpg_81950761_ver1.0_640_480

கலைஞர் காலமானார்! அறிவிப்பு வெளியாகியது! (இணைப்பு)

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று காலமானதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கடந்த பல மாதங்களாக உடல் நிலை மோசமடைந்திருந்த நிலையில் காணப்பட்ட கலைஞர் இன்று மரணமானதாக அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

விரிவான செய்தி:

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27-ம் திகதி நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 29-ம் தேதி மாலை அவருக்கு இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையால் உடல்நிலை படிப்படியாக சீராகி வந்தது.

ஜூலை 31-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய மருத்துவமனையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என கூறப்பட்டது. இந்நிலையில், கல்லீரல் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ஆரம்பகட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு கல்லீரல் மருத்துவ நிபுணர் முகமது ரேலா ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூச்சுத் திணறல் காரணமாக கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவரது உடல் நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்த படங்களை திமுக தலைமை அலுவலகம் உடனடியாக வெளியிட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் நேரில் பார்த்த படங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் நேற்று பார்த்தார். பகல் 1.50 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி, துணைவியார் ராசாத்தி அம்மாள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் நேற்று மருத்துவமனையில் முகாமிட்டிருந்தனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர் காவல் இணை ஆணையர் அன்பு, மயிலாப்பூர் காவல் ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் நேற்று பகல் 12.30 மணியளவில் மருத்துவனைக்கு வந்து நிலவரத்தை ஆராய்ந்தனர். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத் துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்’ என்று கூறப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தகவலை அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். கட்சி நிர்வாகிகளும் வரத் தொடங்கினர். பெண்களும் தொண்டர்களும் கதறி அழுதனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.

நன்றி – த ஹிந்து ஊடகம்

 

 

kaveri_2

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*