sam

முழுமையான சமாதானம் கிடைக்கவில்லை – சம்பந்தன் தெரிவிப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய செயலாளர் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனை, நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளருக்குத் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசு பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசு பன்னாட்டு மட்டத்திலும் நாட்டு மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என எதிர்பார்த்தார்கள்.

குறிப்பாக பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரச கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசமைப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நட்ட ஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை, போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும்.

எனினும் இவை தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. புதிய அரசமைப்பு உருவாக்கும் தீர்மானமானது நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரச தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றன.

இந்த நாடு போர் ஒன்றிற்கு முகம் கொடுத்தமைக்கு காரணங்கள் உள்ளன. அரசு உறுதியாக நின்று நாட்டினை சரியான பாதையில் நடத்த வேண்டும். மேலும் புதிய அரசமைப்பு உருவாக்கமானது நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும் மிகப் பாரிய ஒரு கருமமாகும் எனவும் சுட்டிக்காட்டினார் என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*