hekeliya

சம்பந்தன் தொடர்பில் மஹிந்த அணி விமர்சனம்!

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய நடந்துக்கொள்ளும் விதமானது, அவர் மீதான மரியாதையை இல்லாது செய்துள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இனிமேல் தகுதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நாடாளுமன்றம் முதலாவதாகக் கூடியபோது இடம்பெற்ற எமது முதலாவது உரையின்போதே, இந்த நாடாளுமன்றமானது போலியான ஒன்றாகும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இது நாடாளுமன்றுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மக்களையும் பாரிய சிக்கல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. நாங்கள் 54 பேரும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைவரின் அனுமதியுடன் எதிரணியாக செயற்பட்டோம். பெயரளவில் மட்டுமல்லாது எதிர்க்கட்சியொன்றின் தார்மீக கடமைகளை நாம் நிறைவேற்றினோம்.

அந்தவகையில், நாட்டுக்கு எதிரான அரசாங்கத்தின் பிரேரணைகள், செயற்பாடுகள் மற்றும் வரவு – செலவுத் திட்டங்களுக்கும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகக் கூறிக்கொள்பவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே கடந்த மூன்று வருடக்காலமாக செயற்பட்டனர். இவர்கள், வரவு – செலவுத்திட்டங்களுக்குக்கூட ஒரு முன்மொழிவினை முன்வைக்காமல் பூரண ஆதரவினையே இதுவரை வழங்கி வருகிறார்கள்.

இதனை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்துள்ளார்கள். இனியும் எம்மை அரசாங்கத்துக்குள் இருக்கும் கட்சியின் உறுப்பினர்கள் என தட்டிக்கழித்து செயற்பட சபாநாயகருக்கு முடியாது. நூற்றுக்கு 4.10 வீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதான எதிர்க்கட்சியாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?- அதுவும் வடக்கு – கிழக்கில் மட்டும் உள்ள ஒரு கட்சியை ஒட்டுமொத்த நாடாளுமன்றினதும் பிரதான எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியுமா?- இல்லை.

இதனால், ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தற்போது நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். 54 ஆக இருந்த ஒருங்கிணைந்த எதிரணியினரின் எண்ணிக்கையானது தற்போது 70 ஆக அதிகரித்துள்ளது. 225 உறுப்பினர்களின் 70 உறுப்பினர்கள் எமது அணியில் இருக்கின்ற போதும் இன்னமும் குறைந்தளவிலான நேரமும் வாய்ப்புமே எமக்கு வழங்கப்படுகிறது.

இதனாலேயே இந்த நாடாளுமன்றை போலியான ஒன்றாகும் என்று நாம் விமர்ச்சிக்கிறோம்’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*