mavai

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு மாவை, டக்ளஸ் கோரிக்கை!

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலைசெய்யப்பட்ட சிறுமி றெஜீனாவின் மரணம் தொடர்பில் நீதி கேட்டு நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்ட கோரிக்கையை அவர்கள் விடுத்திருந்தனர்.

இச் குறித்து மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,

இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களது பிணைக்கான காரணம் தொடர்பில் சட்டத்துறையினர் மீள் பரிசிலனை செய்ய வேண்டும். மேலும் வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுபடுத்த மக்களும் அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

கொலை செய்யப்பட்டுள்ள மாணவி றெஜீனாவின் உயிரிழப்புக்கு நீதி வேண்டி முன்ன‍ெடுக்கப்படும் இப் போராட்டமானது நியாயமானதாகும். இச் சிறுமிக்கும், அவரது பெற்றோருக்கும் நீதி கிடைக்க நம் எப்போதும் உங்களோடு இருப்போம் என்றார்.

இது குறித்து டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

இப் போதைப்பொருள் பாவனை பிரச்சினை என்பது இங்கு மாத்திரமல்ல. இது தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்றது.

எனவே இதனை தடுப்பதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டியதுடன் அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து இப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வே கொலைசெய்யப்பட்ட சிறுமிக்கான நீதியாக அமையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*