police

பிஸ்கட் கொடுத்து அழைத்துச்செல்லப்பட்ட சிறுமி – சக மாணவன் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான். சிறுமி தொடர்பில் மாணவன் குறிப்பிட்டுள்ளதாவது,

“சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் ஜெலி ஆகியவற்றை உண்ணக்கொடுத்து பின்னர் மூவர் அவரை அழைத்துச் சென்றனர்” எனவும் அவர்களின் பெயரையும் சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

இதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டவரை நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய சாட்சியான சிறுவனின் வாக்குமூலத்தின் மூலம் வேறு சில முக்கியமான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுழிபுரம் – காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா (வயது-06) கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*