unijaff

நிபந்தனையுடன் வடக்கு முதல்வரை சந்திக்கிறது மாணவர் ஒன்றியம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த மூன்றாண்டுகள் நடத்தியது போன்று இம்முறையும் ஒழுங்கமைக்கும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர் கல்வி மாணவர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் சிலவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைப்பது தொடர்பில் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “மக்களின் தேவையை அறிந்து நிறைவேற்றவேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும். மாறாக மக்களின் தேவை இதுதான் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இணைந்து செயற்படவுள்ளோம்.

வடக்கு மாகாண சபையில் தற்போது உறுப்புரிமை இல்லாத கட்சிகள், கடந்த ஆண்டு 4 பிரிவுகளாக நினைவேந்தலை முன்னெடுத்தன. வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்படும் நினைவேந்தலில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம் என அந்தக் கட்சிகளைச் சேர்ந்தோர் எம்மிடம் தெரிவித்தனர்.

ஆனால் நினைவேந்தலை மாணவர் ஒன்றியம் ஒழுங்கமைத்தால் இணைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையால் பிரிந்து நிற்காமல் நினைவேந்தலைச் செய்ய முடியுமானால் வடக்கு மாகாண சபையுடன் நாம் இணைந்து செயற்படவுள்ளோம்.

இளைய சமூகமாகி நாம் நடுநிலையாக நின்று உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்றோம். எமது உரிமைக்காக நீங்கள் ஒன்றுபடுங்கள். நாம் அதனைச் செய்துமுடிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*