viky

“வடக்கு அரசியல்“ – நடக்கப் போவது என்ன? – தமிழ்லீடருக்காக வித்தகன்

மீண்டும் ஒரு தேர்தல் பரபரப்புக்கு இலங்கை தயாராகி விட்டது. ஆம்… மாகாண சபைத் தேர்தல் வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி விட அரசாங்கம் எத்தனிக்கிறது. இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் சில ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க தீவிரமாக உழைத்து வருகின்றன. இந்தப் புதிய கூட்டணியின் மையமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் – தமிழ் மக்கள் பேரவையினரும் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் – செயல்கள்- தடைகள் – அவருக்கு சார்பானோரை விலக்கும் – ஒதுக்கும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்ட நேரத்திலேயே தமிழ் மக்கள் பேரவை முகிழ்த்தது. இதன் தலைவராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே அறிவிக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ் (2017 இன் இறுதியிலேயே கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தது), புளொட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன பேரவை ஆரம்பிக்கப்பட்டபோதே இணைந்து கொண்டன.

தமிழரசு கட்சிக்கும் கூட்டமைப்பின் பங்காளிகளுக்கும் இடையிலான பனிப்போர் வெளித்தெரிய ஆரம்பித்த காலத்திலும் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டாலும் “பேரவை ஒருபோதும் அரசியல் கட்சியாகப் பரிணமிக்காது” என்ற உறுதிமொழியை அதன் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தார். பேரவை அரசியல் கட்சியாகப் பரிணமிக்காது என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும், புதிய கூட்டணிக்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் பேரவையை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டி சில காரியங்களைச் சாதிக்கவும் முயன்றார். ஆனால் இதையே காரணமாக்கி முதலமைச்சர் மீது கொண்ட காழ்ப்புணர்வால் அவரை வெளியேற்றத் திட்டமிட்டார் சுமந்திரன் எம்.பி.

இரு திட்டங்களுமே பிசுபிசுத்துப்போன நிலையில் தற்காலிக சமரசத்துக்கு இருவரும் வரவேண்டிய சூழலை இரு விடயங்கள் ஏற்படுத்தின. கூட்டமைப்பின் தலைவரின் கண்டிப்பான உத்தரவு – உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு என்பனதான் அந்த இரு விடயங்களும். எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் சமயத்திலும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அரவணைத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து விட்டது – மறுத்து விட்டது. இதனால் அவரும் கூட்டமைப்புக்காக வாய் திறக்க மறுத்துவிட்டார்.

முதலமைச்சரின் இந்த மௌனத்தை தமக்கு சாதகமாக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் மூன்று தடவைகள் முதலமைச்சரைச் சந்தித்தனர். இதன் மூலம் “முதலமைச்சர் தமது பக்கமே உள்ளார்” என்ற செய்தியை மக்களுக்குச் சொல்லாமல் சொன்னார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும்கூட இதே நிலைமையும் – உறவும் தொடர்ந்தது. ஆனால் முதலமைச்சரின் சொந்தக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அவரை சீண்டவேயில்லை.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்த தகவல்கள் உறுதியானதும் கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் சிலர் “முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவே அவரை முலமைச்சராக நிறுத்த வேண்டாம்” என்று கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் கூட்டமைப்புத் தலைமை எந்தப் பிரதிபலிப்பையும் காட்டியிருக்கவில்லை. காரணம், முதலமைச்சரை ஓரம்கட்டி செய்த செயற்பாடுகளே இந்நிலைமைக்குக் காரணம் என்பதை அவர் நன்கறிந்திருந்தார். இதனால் கட்சியின் உள் உயர்மட்டங்களால் எதையும் செய்யமுடியவில்லை.

இந்நிலையில், கட்சியினர் அடுத்த திட்டத்தை நோக்கி நகர்ந்தனர். அதாவது தமிழரசுக் கட்சியில் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களை ஓரங்கட்டல் – அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அடுத்த தேர்தலில் சந்தர்ப்பம் அளிக்காது தவிர்த்தல். இவர்களின் முதல் குறியாக இருந்தவர், வடக்கின் சிறுவர், பெண்கள் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன். கடந்த தேர்தலில் 87,870 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் வரிசையில் முதல்வருக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர். ஆரம்பத்தில் இவர் மீதான அனுதாப அலைகளே வாக்குகளாக மாறியிருந்தாலும், இன்றைய நிலையில் தனது செல்வாக்கை அவர் வீழ்ந்து விடாது பார்ப்பதில் அக்கறையாக உள்ளார்.

தமிழரசுக் கட்சி ஏற்கனவே அவரை ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் தள்ளி வைத்திருந்தாலும் கட்சியின் அனைத்து சட்டங்களையும் உடைத்தும் – கட்சி உயர்மட்டங்களின் முடிவை எதிர்த்தும் முதல்வர் அவருக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கினார். இந்நிலையிலேயே அனந்தி சசிதரனை கட்சியிலிருந்து வெளியேற்றும் முடிவை கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் அண்மையில் நடந்தபோது தீர்மானம் எடுக்கப்பட்டது. அனந்தி சசிதரன் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என மக்கள் அறிந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கட்சியில் இருந்து விலகிய சிவகரனின் பெயரையும் கட்சியினர் சேர்த்துக் கொண்டனர். இதேபோன்று முதலமைச்சருக்கு நெருக்கமானவரும், ஊழல் குற்றச்சாட்டால் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதன்பேரில் பதவி விலகியவருமான ஐங்கரநேசனை மெல்ல அப்படியே தள்ளிவிட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தன்னுடன் வேட்பாளர் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையாக இருக்கும் இவர்களை கூட்டமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்குவதன் மூலம், முதலமைச்சர் தவறாக – தான்தோன்றித் தனமாக நடக்கிறார் என்பதைக் காட்டல் – இதன்மூலம் மக்கள் கூட்டமைப்பின்பால் கரிசனை கொள்ள வழியேற்படுத்தலை செய்து விக்னேஸ்வரனை வீழ்த்துவதே அவர்களின் திட்டம். இவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுவிட்டால், முதலமைச்சரின் கோரிக்கையை கட்சித் தலைமையும் ஏற்காது எனவே முதலமைச்சர் வெளியேறுவார் அல்லது ஒதுங்கிக் கொள்வார். இதன் மூலம் தாம் நினைத்ததை சாதித்து விடலாம் என்பது கட்சி உயர்மட்டங்களின் நினைப்பு.

இதற்கு “ஆப்பு” வைத்தால்போல் முதல்வர் விக்னேஸ்வரன், இப்போது செயற்பட்டிருக்கிறார். தனது வழியிலேயே அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், மற்றும் க.அருந்தவபாலன்,பொ. ஐங்கரநேசன் ஆகியோரை பேரவைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களை மத்திய குழுவில் இணைத்துக் கொள்ளவும் கேட்டுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை அவர்கள் மறுக்கவில்லை. எனினும் இப்போது ஐங்கரநேசனை சேர்ப்பதா? அல்லது விடுவதா? என்பதில் குழப்பத்தில் உள்ளார்கள். ஆனால் சில ஊடகங்கள் இதைக் குழப்பமாகக் காட்ட முயற்சித்தாலும், மூடிய அறைக்குள் நடந்த இந்த விடயம் ஆதாரபூர்வமாக வெளிவரவில்லை என்பதே உண்மை.

புதிய கூட்டணிக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றபோதிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனோ இணைந்து – சேர்ந்து – செயற்படக்கூடியவராக முதலமைச்சர் இல்லை. இதை அக்கட்சியினரும் நன்கறிந்தபோதும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு மீது இருக்கும் அதிருப்தி – வெறுப்பு – உள்ளுக்குள் இருக்கும் எதிர்ப்பு – என்பவற்றைப் பயன்படுத்தி வாக்குவங்கியைத் தமது பக்கம் திருப்ப முனைகிறது. இந்நிலையில் புதியவர்களின் வருகை மூலம் தமது செல்வாக்கு உடைவதை இக்கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் விக்னேஸ்வரனின் கணக்கு ஒன்றுதான் என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கறிந்தவர்கள். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதும் – தனக்கு சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில் அரசியலை விட்டு ஒதுங்குவதும்தான்.

நடக்கப்போவது என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

– தமிழ்லீடருக்காக வித்தகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*