mai-ranil

மைத்திரி – ரணில் தேசிய அரசு ”தப்பிப் பிழைத்தது” எப்படி?

தேர்தலின் பின்னரான அரசியல் குழப்பநிலை இப்போது ‘அமைச்சரவை மாற்றம்’ என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கின்றது. அரசு கவிழுமா என்ற கேள்விக்கும், “இல்லை” எனத் தெளிவான பதில் கிடைத்துள்ளது. “பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்வோம், தனியாக ஆட்சியை அமைப்போம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்னெடுத்த நகர்வுகளும் முடிவுக்கு வந்துவிட்டன. உயர் நீதிமன்றத்தின் விளக்கம் வரும் வரையில் பொறுத்திருப்போம் என இப்போது அவர்கள் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொண்டுள்ளார்கள்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவைப் பிரதமராக நியமித்து ஶ்ரீல.சு.க.வினரைக் கொண்ட புதிய அமைச்சரவையை உருவாக்குவதுதான் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கனவாக இருந்தது. இதற்கு மகிந்தவும் முழு ஆதரவைத் தெரிவிக்க உற்சாகத்தில் திளைத்த சுதந்திரக் கட்சியினரால், தமக்கு மேலதிகமாகத் தேவையான 17 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிறுபான்மைக் கட்சிகள் சிலவற்றையும், ஐ.தே.க.விலிருந்து சிலரையும் தமக்கு ஆதரவாக மாற்றலாம் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு வெற்றிபெறவில்லை.

இவ்வாறு தனியாக அரசை அமைக்கு முயற்சி தோல்வியடைந்த நிலையில், அரசிலிருந்து விலகப்போவதாக இரவு அதிரடியாக அறிவித்த அவர்கள், காலை எழுந்தவுடன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். தேசிய அரசில் தொடர்வதுதான் அவர்களுடைய ‘தற்போதைய நிலை’ எனச் சொல்லப்படுகின்றது. அதனைவிட வேறு தெரிவு அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. தேர்தல் தோல்வி மைத்திரி அணியினரைத்தான் கடுமையாகக் குழப்பியிருக்கின்றது.

அமைச்சரவை மாற்றம்

அந்த நிலையிலேயே, பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதா என இப்போது உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துப்படி, அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு இருந்த அந்த அதிகாரத்தை இல்லாமல் செய்துள்ளது. பிரதமரை மாற்றவோ, புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. பிரதமரின் ஆலோசனையுடனேயே அதனை அவர் செய்ய முடியும். இந்த நிலையில்தான் இப்போது அமைச்சரவையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பலப்பரீட்சை ஒன்று இடம்பெறுகின்றது.

தேசிய அரசு தொடரும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த நிலையில், புதிய அமைச்சரவை கடந்த புதன்கிழமை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பதவிகளை பகிர்ந்தளிப்பதில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தொடரும் இழுபறிகளால் அது தொடர்ந்து தாமதமாகிறது. பிரதமர் தயாரித்த பட்டியலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், ஜனாதிபதி தனியான பட்டியல் ஒன்றைத் தயாரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் ஞாயிற்றுக்கிழமை (25-02-2018) புதிய அமைச்சரவை பதவியேற்கும்.

கடந்த 3 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்தும் கவனத்தில் எடுத்தே இந்த அமைச்சரவை மாற்றத்தை செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமை திட்டமிடுகின்றது. இழந்துள்ள ஆதரவுத் தளத்தை மீளக்கட்டியெழுப்ப இது அவசியம் என அவர்கள் கருதுகின்றார்கள். இதன்படி அமைச்சர்கள் சிலர் பதவி விலக வேண்டும் என கட்சித் தலைமை விரும்புவதாகத் தெரிகின்றது. ஆனால் குறிப்பிட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதற்கு மறுப்புத் தெரிவிப்பதும், அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்குக் காரணம்.

மைத்திரியின் சங்கடம்

ஜனாதிபதியின் தலையீடு எதுவும் இன்றி அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும் தான் என்பதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என் நிலைப்பாடு இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஜனாதிபதி அமைச்சரவையை தன்னடைய முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனாதிபதி அதற்கு இடம் கொடுக்காது கட்சி உறுப்பினர்கள் பலருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. செவ்வாய்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் இப்போதுள்ளது போலவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என மைத்திரி வலியுறுத்தியதை கட்சியின் கடும்போக்காளர்கள் ரசிக்கவில்லை.

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை தான் கோரியிருப்பதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் காலம் டிசெம்பருடன் காலாவதியாகிவிட்டது என்பதுதான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் போக்காளர்களின் கருத்து. அதன்படி, புதிய அமைச்சரவை ஒன்றை மட்டுமன்றி, புதிய பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருப்பதாக அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். இது குறித்தே நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியிருக்கின்றார்.

இருந்தபோதிலும், கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, தயாசிறி யசேகரா ஆகியோர் பங்கேற்கவில்லை. இருவரும் ஶ்ரீல.சு.க. தனியாக அரசை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்கள். தேசிய அரசுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளார்கள் என்றே சொல்லப்படுகின்றது.

தன்னை பலப்படுத்தும் ரணில்

அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் அதேவேளையில், கட்சியில் தன்மை பலப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறங்கியிருக்கின்றார். வெள்ளிக்கிழமை கட்சியின் முக்கிய தலைவர்களுடன் அலரி மாளிகையில் அவர் நடத்திய கூட்டம் இதனைத்தான் உணர்த்தியது. தன்னுடைய தலைமைப் பதவிக்கு சவாலாகவுள்ள சஜித் பிரேமதாச, நவீன் திசநாயக்க உட்பட முக்கியஸ்த்தர்களுடன் அவர் நடத்திய கூட்டத்தில் தலைமைத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. கட்சிக்குள் தனக்கு சவால்விடக்கூடியவர்களை அந்தக் குழுவுக்குள் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கியுள்ளார்.

அந்தத் தலைமைக்குழு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டத்தை வகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில், ஒரு வாரகாலப் பகுதிக்குள் புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுவிடும். அந்தத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 8 ஆம் திகதிய மக்கள் ஆணையைச் செயற்படுத்துவதற்கான திட்டமாகவே இது இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியைப் புனரமைப்பதாக ரணில் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே இந்தத் தலைமைத்துவக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவை அமைத்திருப்பதன் மூலம் இரண்டு விடயங்களை ரணில் சாதித்துள்ளார். ஒன்று – கட்சித் தலைமைக்கு சவாலாக வரக்கூடியவர்களை இதற்குள் உள்ளடக்கியிருப்பதன் மூலம், தனக்கான அச்சுறுத்தலை இல்லாமல் செய்துள்ளார். இரண்டு- எதிர்காலத்தில் கட்சி எதிர்கொள்ளக்கூடிய தோல்விகளுக்கான பொறுப்பை ரணில் ஏற்கதேவையில்லை. இந்தக்குழுவே அதனை ஏற்கவேண்டியிருக்கும். ஆக, தலைமைத்துவக்குழு ஒன்றை அமைத்ததன் மூலம் ரணில் தன்னைப் பலப்படுத்திக்கொண்டுள்ளார். சில காலத்தக்கு அவருடைய தலைமை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

சர்வதேச தலையீடு

கொழும்பின் அரசியல் குழப்பங்கள் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்காமல் பாதுகாத்தமைக்கு மைத்திரி – ரணில் ஆகியோரின் நலன்களுக்கு அப்பால் சர்வதேசத்தின் நலன்களும் சம்பந்தப்பட்டிருந்தது ஒரு காரணம். இந்திய, அமெரிக்க தூதுவர்கள் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியது தெரிந்த செய்திதான். இதனைவிட, தேசிய அரசைக் கவிழ்த்தால் இலங்கைக்கான சர்வதேச உதவிகள் நிறுத்தப்படும் என்ற வகையிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இரு தலைவர்களையும் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் 2015 இல் ஆட்சி மாற்றத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை மீறிச் செயற்படக்கூடாது என கடும் தொனியில் கூறியிருந்தார். இந்தியா அல்லது மேற்கு நாடு ஒன்றின் ஆலோசனையுடனேயே சம்பந்தன் செயற்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்தப் பின்னணியில் தேசிய அரசு பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசு இன்னும் இரு வருடங்களுக்குத் தொடரும் எனச் சொல்லப்பட்டாலும், ஒரு பலமான அரசாக அது இருக்கும் எதிர்பார்க்கமுடியாது!

– தமிழ்லீடருக்காக கிருஸ்ணகுமார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*