North

உள்ளூராட்சி சபை தேர்தல் வடக்கில் சொன்ன செய்தி என்ன ?

ஆண்டுக்கு ஒரு முறை ஏதோ ஒரு தேர்தலை சந்திக்க இலங்கை தவறுவதில்லை – இம்முறை கடந்த 10 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் நாட்டையே உலுப்பி வைத்துள்ளது – இதில் வடக்கின் தேர்தல் நிலவரம் கவலைக்கிடமான முடிவுகளை அள்ளி விட்டிருக்கிறது. ஆரம்ப தேர்தல்களைப்போல் அல்லாமல் இம்முறை நடந்த தேர்தல் வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளமை முதல் விடயம் – வட்டார முறை, விகிதாசாரமுறை, பெண் வேட்பாளர்கள் அவசியம் என பலவகை சிக்கல்களை ஏற்ப்படுத்தி வடக்கு மக்களையும் வேட்பாளர்களையும், கட்சிகளையும் கதிகலங்கப்பண்ணியது.

தேர்தல் முடிவுகள் கூட எந்த கட்சிகளையும் திருப்திப்படுத்த முடியாத அளவுக்கு வெளிவந்திருப்பதற்கு கட்சிகளின் செயற்பாடுகள் மக்கள்மத்தியில் ஏற்ப்படுத்திய அதிருப்தி என்றே சொல்லலாம்.

வடக்கில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் இந்த அதிர்வலைகள் எழும்ப தவறவில்லை, தமிழ் மக்களின் பிரதான தேசிய கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்ப்பட்ட பிளவுகளும் அதன் மூலம் நிலவிய பிளவுசார் பிரச்சனைகளும் கட்சியை ஆட்டம்காண வைத்தன – இருப்பினும் கட்சிசார் அரசியல்வாதிகள் பலவிடயங்களை உள்ளே வைத்துக்கொண்டு மேடைகளில் முழங்கத்தவறவில்லை.

வடக்குமாகாண ஊழல் மோசடிகளோடு அம்பலமான பலபிரச்சனைகள் சாதாரண உள்ளூராட்சி சபை அமைப்பு தேர்தலில் பாரிய ஆட்டத்தைக் காணவைத்தமை ஆச்சரியப்படவைக்கும் அரசியல் உண்மை – வடக்குமாகாண முதலமைச்சர் இந்த தேர்தலில் தனக்கு ஏன் வம்பு என்று – ஒதுங்கிக்கொண்டமை மக்களை வியப்படைய வைத்தவிடயம்.

கூட்டமைப்புசார் விடயங்களில் அக்கறை அற்றவராக முதலமைச்சர் தன்னை காட்டிக்கொண்டமை அவர்சார்ந்த அரசியல் கட்சியில் அவர்கொண்ட அதிர்ப்தியாக இருப்பினும் அவர்மக்கள் நலனில் சற்று அக்கறை இன்றி இருந்ததாக எண்ணத்தோன்றுகின்றது .

பிளவுபட்ட அரசியல் நிலைமைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒருவகையில் காரணகர்த்தாவாக விளங்கியமை மறுக்கமுடியாத உண்மையே – இந்த இக்கட்டான நிலைமையையும் தெற்கின் அரசியல் போக்கையும் நன்குணர்ந்த விக்னேஸ்வரன் இம்முறை தேர்தலின் முக்கிய தன்மையை விளங்கிக்கொண்டும் பாராமுகமாக செயற்பட்டமை மக்களை அவர்சார் அரசியல் பின்னணியை கூர்ந்து நோக்க வைத்துள்ளது .

தேசியம், தேசியம் சார் அரசியல் என்பவை 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்சிகளுக்கு ஒரு ஊக்க பானமாக விளங்கியமை உண்மைதான் ஆனால் மக்கள் இப்போது அந்த மாய வலையில் சிக்கிக்கொள்ள தயாராக இல்லை.

காரணம் உணர்ச்சிசார் அரசியலை இப்போதுதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதை இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக காட்டுகின்றன.

யாழ்மாநகரை பொறுத்தவரையில் அம்மக்கள் உணர்ச்சிசார் அரசியலுக்கு மடியும் அளவில் இல்லை என்பதை கூட்டமைப்பு கைப்பற்றிய பிரதேசசபைகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு கணிப்பிடமுடிகின்றது கிட்டத்தட்ட 80% வீதமான வட்டாரங்களை கூட்டமைப்பே கைப்பற்றி இருப்பது இந்த முடிவுக்குவர ஏதுவாகின்றது .

கட்சிக்குள்ளே ஏற்பட்ட முரண்பாடுகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உணர்ச்சி அரசியலின் பூர்வீகமான இரண்டு சபைகளை கைப்பற்றியுள்ளமை முக்கியவிடயம்.

இருப்பினும் மக்கள் முன் எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாமை மக்களின் அதிர்ப்தியை காட்டுகின்றது 69 % மக்களின் வாக்களிப்பு என்பது வடக்கின் வாக்களிப்பு வீதத்தின் மிக அடிமட்டத்தையும் காட்டி நிற்கின்றது .

வடக்கின் தேர்தல் நிலவரங்களும் – மக்களும் கட்சிகளும் இடையில் ஏற்ப்படுத்திக்கொண்ட முரண்பாடுகளையும் எடுத்தியம்பி எதிர்க்கட்சியான தமிழ்தேசிய கூடமைப்புக்கு ஆப்பு செருகும் வகையில் தெற்கு அணியினர் இலாவகமாக செயர்ப்பட்டமை இன்னும் சிலநாட்களில் எல்லோருக்கும் தெரியவரும் .

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது வடக்கில் முக்கியமாக யாழ்ப்பாண பிரதேசசபைகளில் வெளிப்பட்டிருக்கின்றது – இலங்கை அரசின் தேசிய கட்சிகள் ஒருசில இடங்களில் அதிகூடிய வாக்குகளில் தமது வெற்றியை பதிவு செய்திருப்பதில் இருந்து நாம் இந்த முடிவுக்கும் வரமுடியும்.

தமிழரசின் கோட்டை என கூறிய இடங்களை ஈழமக்கள் ஜனநாஜக கட்சி வென்றமையும் , தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் கோட்டை என்ற இடங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றமையையும் வைத்துக்கொண்டு மக்களை குழப்பும் அரசியல் பரப்புரைகளையே ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டன என்பதை முடிந்த முடிவாக கூறலாம் – ஆக மொத்தம் வென்ற சபைகளில் கூட தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்ப்பட்டிருப்பது வடக்கு அரசியலில் மக்கள் இழந்திருக்கும் நம்பிக்கையும், அதிர்ப்தியும்தான் முக்கிய காரணம் .

மக்களை திருப்திபடுத்துவோம் என்ற கணக்கில் பரப்புரைகளை மட்டும் மேற்கொண்டால் போதாது என்பதை ஒவ்வொரு கட்சியும் தெளிவாக விளங்கிக்கொள்ளும் நிலைமைக்கு இப்போது வந்திருப்பார்கள் என்று நாம் ஊகிக்கலாம் .காரணம் கட்சியையும் கட்சிகளின் பின் புலங்களையும் அவற்றின் முற்போக்கு சிந்தனைகளையும் அவை கடந்துவந்த பாதைகளையும் இதுவரையில் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் மக்கள் கவனிக்க தவறவில்லை – முகங்களுக்கு விழுந்த வாக்குகளாகவே இப்த உள்ளூராட்சிசபை வெற்றிகளை ஒவ்வொரு கட்சியும் நினைத்துக்கொள்ளவேண்டும் – இவை கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளாக கருத சற்றும் இடமில்லை – காரணம் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த வேட்பாளரின் முகங்களுக்கு விழுந்த வாக்குகளையும் அவர்கள் வென்ற விகிதாசாரத்தையும் கணிப்பிட்டு இதை உறுதியாக கூறமுடியும் ஆக மொத்தம் ஒட்டுமொத அரசியல் குழப்பத்துக்கு கட்சிகளில் மேம்போக்கான செயர்ப்பாடுகள்தான் காரணம் என்ற முடிந்த முடிவுக்கு நாம் இப்போதுவருவோம் .

முடிந்த தேர்தல் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தை எந்த கட்சிகளும் பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்பதை காட்டி நிற்கின்றது அத்தோடு மட்டும் இல்லாமல் இனி வரும் தேர்தல்களுக்கு யார் எப்படி முகம்கொடுக்கவேண்டும் கட்சிகளில் என்ன மாற்றங்களை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்பதையும் இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது – இங்கே நான் வென்றேன் நீ வென்றாய் என்பதற்கும் அப்பால் மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்த பெரும்பான்மையை தெரிவுசெய்ய இடமளிக்கவில்லை என்பதை சுட்டி நிற்கின்றது .

இங்கே எந்த கட்சிகளும் வெல்லாமல் தனி நபர்களின் வெற்றிகளாக இவற்றை கருத்தில்கொண்டு ஒவ்வொரு கட்சியும் தம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு தம்மை தயார்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி பெரும்பான்மை பெறவேண்டியமை அவசியமாகின்றது .

இந்த தேர்தலை ஒரு பாடமாக கருதாது கட்சிகள் மீண்டும் தம் போக்கில் செயர்ப்ப்படுமாயின் அடுத்தடுத்த தேர்தல்களில் அரச கட்சிகள் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை .

– பிரியா இராமசாமி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*