gotha

அச்சத்தால் நாட்டைவிட்டு தப்பி ஓடினார் கோத்தா?!

மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகளுக்காக கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், மலர்மொட்டு சின்னத்தின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மஹர பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கடவத்தை கிரில்லவல பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் போதே முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியரொருவர் (லசந்த விக்ரமதுங்க) படுகொலைசெய்யப்பட்டார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பத்திரிகையில் தகவல் வெளியிட்டமைக்காகவே அவர் படுகொலைசெய்யப்பட்டார்.

அது இராணுவத்தினரின் செயற்பாடு. தற்போது அந்த இராணுவ வீரர் நாட்டில் இல்லை. நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளார். மலர்மொட்டுச் சின்னத்தின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் அவர். நாட்டில் இல்லாத அந்த ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 12ஆம் திகதியே நாடுதிரும்பவுள்ளார். தேர்தல் முடிந்த பின்னரே வருவார். கைதுசெய்யப்படக்கூடும் என்பதனாலேயே நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் இருக்கின்றார். ஆனால் கோட்டாபயவை கைது செய்ய அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்படுவார். மிக் விமான கொடுக்கல் வாங்கலின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கியில் வைப்புச்செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஐந்துபேரின் கணக்குகளிலேயே அந்தப்பணம் வைப்புச்செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி பின்னிற்காது. தற்போது கட்சியின் உப தலைவராக உள்ள ரவி கருணாநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பனவின் குழு பரிந்துரைத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பிரதமர் எம்முடன் கலந்துரையாடினார். யாராக இருந்தாலும் நாம் தண்டனை வழங்குவோம். எமது கட்சியின் தனித்துவம் அது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த அனைவரும் புனிதர்கள் அல்லர்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்தில் வோல்டர் தல்கொடபிட்டிய ஆணைக்குழுவின் பிரகாரம் நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்சம் ஒரு பிரதேசசபை உறுப்பினர்கூட அவ்வாறு பதவிநீக்கம் செய்யப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் வாகனத்திலேயே ஊழல் மோசடியாளர்கள் அனைவரும் பயணம் செய்தனர்.

ஆனால் தற்போது தூய்மையான இரு அரசியல்வாதிகள் நாட்டை ஆட்சிசெய்கின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல் பிரசார மேடைகளில் ஒருவரையொருவர் சாடிக்கொண்டாலும் பெப்ரவரி 10ஆம் திகதியுடன் அவை நிறைவடைந்துவிடும். 11ஆம் திகதிக்கு பின்னர் இந்த அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் வகையில் இரு தலைவர்களும் ஒன்றித்து செயற்படுவார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*