cm 2

“தேசியத் தலைவரின் அரசியல் பாதை“ – விக்கி சொல்வது போல் தவறானதா?

“பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் சாவையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை” இது அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனக்கெதிராக தமிழரசுக்கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட பதிலறிக்கையில் குறிப்பிட்ட கருத்து.

முதல்வர் சொல்வது போல தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்பது உண்மையானால் அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்பதே யதார்த்தம்.

அந்த வெற்றிடத்தில் விடுதலைக் கீதம் இசைப்பதாகக் கூறிக்கொண்டு கோட்டான்கள் கத்துகின்றன. விடுதலைக்கான மயிலாட்டம் எனச் சொல்லி வான்கோழிகள் சிறகை விரிக்கின்றன.
தமிழ் மக்கள் குயிலோசையையும் மயிலாட்டத்தையும் இனங்காண வல்லவர்கள். எனினும் வெற்றிடம் போலிகளால் நிரப்பப்பட்டுவிட்டது. இப்போது உள்ளூராட்சி தேர்தல் நாட்கள்…

நாறி மணக்கும் தேர்தல் களத்தில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என அறிவித்தவர் முதலமைச்சர்!

நியாயமிருக்கலாம்!

ஆனால் தலைவர் பிரபாகரன் பற்றிய அவர் கருத்து அதே நாற்றமெடுக்கும் கழிவுக்குளியிலிருந்து தான் எழுந்திருக்கிறது.

தேசியத்தலைவர் அவர்கள்  அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையைப் புறக்கணித்தாராம், அதனால் தான் அவரை மரணம் தீண்டியதாம்!

யார் அந்த அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள்?

1976ல் இனி அடுத்த மேதினம் தமிழீழத்தில் தான் என்று சவால் விட்டுவிட்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அதிகாரத்துக்கு அடங்கிப்போய் கிடைப்பதை வாங்கப் பேச்சுக்கள் நடத்திய அமிர்தலிங்கமா?

சமஷ்டி என்றும் சுயநிர்ணய உரிமை என்றும் மேடைக்கு மேடையாக முழங்கிவிட்டு ஒற்றையாட்சிக்குச் சல்லாரி போடும் சம்பந்தனா?
யார் அந்த அறிவாளிகள்?

அவர் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டவர்! மக்களின் அபிலாசைகளிலிருந்து கற்றுக்கொண்டவர்! மக்களின் உணர்வுகளிலிருந்து கற்றுக்கொண்டவர்!

அதனால் தான் மக்களுக்காக வாழ்ந்தார்! மக்களுக்காகப் போராடினார்! மக்களுக்காக இளமை சுகங்களை இழந்தார். மக்ளுக்காக பசியையும் தாகத்தையும் ஓய்வின்மையையும் ஏற்றுக்கொண்டார். மக்களுக்காக வெய்யிலையும் மழையையும் பனியையும் அனுபவித்தார்.

அதனால் தான் விடுதலைப் பிரதேசங்களை அமைத்து மக்களுக்கான ஆட்சி எது என்பதை மக்களுக்கு நடைமுறையில் வழங்கினார்.

உயிர்க்கொடைகளும் குருதி சிந்தல்களும் அர்ப்பணிப்புக்களும் துன்ப துயரங்களும் அவரின் பல்கலைக்கழகங்களாயின. அனுபவங்கள் அவரது ஆசானாகின.

உலகப் போராட்ட வரலாறுகளையும், உலகப் புரட்சிகரத் தத்துவங்களையும் அலசி ஆராய்ந்து அந்த அனுபவங்களை எமது மக்களுக்கும், மண்ணுக்கும் பொருத்தமான வகையில் புடம் போட்டு தலைவனின் இலட்சிய நெருப்புக்கு நெய்யூற்றினார் மேதை அன்ரன் பாலசிங்கம்.

அப்படியானால்  அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அரசியல் சூட்சுமம் அறியாதவரா? அரசியல் தத்துவார்த்த அறிவு இல்லாதவரா?

நயவஞ்சகமும், சதியும், கழுத்தறுப்பும், துரோகமும் தான் அரசியல் சூட்சுமம் என்றால் எமது தலைவர்கள் அரசியல் சூட்சுமம் தெரியாதவர்கள் தான்.

மலையக மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு தோள்கொடுத்து அமைச்சுப் பதவி பெற்றவர் ஜி.ஜி.பொன்னம்பலம்.

தேர்தல் மேடைகளில் சமஷ்டி என்று கோஷமிட்டு விட்டு மாவட்ட சபை என்ற மாயமானைக் காட்டிக்கொண்டு மந்திரி பெற்றவர் திருச்செல்வம்.

தமிழீழத்துக்கு ஆணைகேட்டுவிட்டு சிங்கள அரசின் எதிர்க்கட்சித் தலைவராகக் குளிர் காய்ந்தவர் அமிர்தலிங்கம்!

பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழிக்கவைத்த, 1958 கலவரத்தை நடத்தித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்தவர் என்.ஜே.வி. செல்வநாயகம்.

சமஷ்டிக் கோஷம் எழுப்பிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராகி இணக்க அரசியல் நடத்துபவர் சம்பந்தன்!

நாளும் பொழுதும் விடுதலைப்போராட்டத்துக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு தமிழ் மக்களின் அழிவைத்தடுக்கப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டுமென ஆலோசனை கூறியவர் ஆனந்தசங்கரி.

இவர்களின் எந்த சூட்சுமமான அரசியல்வாதிகளைப் புறந்தள்ளியமையை நினைத்து முதலமைச்சர் தலைவர் பிரபாகரன் அவர்களை குற்றம்சாட்டினார்?

அப்படியானால் –

இவர்களைப் போல், இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வழிதவறிப் போயிருக்கவேண்டுமென முதலமைச்சர் விரும்புகிறாரா?
ஏதாவது ஒரு இலட்சியத்தை வைத்து கட்சி ஆரம்பிப்பது பின்பு கட்சியின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் கட்சியிலுள்ள தலைமைப்பீடத்தின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும் கொள்கைகளையே கைவிடுவது – இது தமிழ் நாடாளுமன்ற அரசியலின் பாரம்பரிய வழிமுறை!

அதற்கு விலைபோக தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களோ, அவரின் தலைமையை ஏற்றவர்களோ என்றும் தயாரில்லை என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும்.

தேசியத் தலைவர் பிரபாகரன் – ஒரு தியாக நெருப்பு!

வசதிக்கும், வாய்ப்புக்கும், பதவிக்கும், அதிகாரத்துக்கும் விலைபோகும்
எவருக்கும் அவரை விமர்சிக்கும் உரிமையில்லை.

“தலைகள் குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா
விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா”

– புதுவை இரத்தினதுரை –

தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*