election

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் போட்டி – பெப்ரல் தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களையும் அவர்கள் போட்டியிடும் பிரதேசங்களையும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வலியுறுத்தியுள்ளது.

குற்றமிழைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர் பட்டியலொன்றை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவிடம் கையளித்த பின்னர் இந்த விடயத்தை வலியுறுத்தியதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று நேரடியாக சென்றிருந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி உள்ளிட்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களை கண்காணிக்க வேண்டும்

இந்த சந்திப்பில் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

(இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடத்தும் வகையில் பெப்ரல் அமைப்பால் வழங்க கூடிய ஒத்துழைப்பு மற்றும் இம்முறை தேர்தலில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த குழுவினரை பணிகளில் ஈடுபடுத்துவது குறித்து பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் அதிகாரிகளும் எமக்கு அறிவுறுத்தினர்.

அத்துடன் நாம் எமது நன்றியை பொலிஸாருக்கு தெரிவித்தோம்.இதுவரையான காலப் பகுதியில் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கென 71 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் நீதியை சிறந்தமுறையில் அமுல்படுத்தியுள்ளதாகவே எமது கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.இதுவரை 50 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

ஒரு விடயம் குறித்து நாம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நாளில் சில பிரதேசங்களில் தேர்தல் சட்டத்தை மீறி பேரணி சென்ற குழுவினர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம்.அதேபோன்று இதுவரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொண்டோம்.

கைதுசெய்யப்படுவதுடன் மாத்திரம் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டாம் என நாம் கோரிக்கை விடுத்தோம்.இதற்கு பொலிஸ் மா அதிபர் தனது இணக்கத்தை தெரிவித்தார்.இது தொடர்பில் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்தார். நாம் மார்ச் 12 இயக்கம் என்ற வகையில் இந்த நாட்டு மக்கள் எமக்கு பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகள், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நபர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்களை வழங்கியுள்ளனர்.

அது தொடர்பான பட்டியலையையும் இன்று நாம் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்தோம். இந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் பகுதிகளில் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.விசேடமாக அவர்கள் எந்தவொரு வகையிலும் தேர்தல் சட்டத்தை மீறாதவாறும் மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாவாறும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளக் கூடியவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இந்த நாட்டின் சட்டத்தை மற்றும் தேர்தல் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*